Monday, June 29, 2009

சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்போம்

என்று மில்லாதவாறு, பெரும் தொகை நிதியை ஒதுக்கி, பிராந்திய வல்லரசினதும், உலக வல்லரசினதும் ஆதரவுடன், ஆசீர்வாதத்துடன், இன அழிப்புப் போரை மிகவும் தீவிரமாக, வெறித்தனத்துடன் மேற்கொண்டுவருகின்றது ராஜபக்ச அரசு.
மிகவும் நெருக்கடியான, அதி முக்கியமான காலகட்டத்தில், நாளாந்தம், ஐம்பது, நுாறு பேர் என, எங்கள் மக்கள், சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படுகின்றனர். பச்சிளம் பாலகர்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைவரும் பால் வயது வேறுபாடின்றி, கால்வேறு கைவேறாய், தலைவேறு முண்டம் வேறாய், பிய்த்து எறியப்படும் கொடுமை வன்னி மண்ணில் அரங்கேறுகிறது.

சாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் எங்களது மக்கள். இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்துவார் யாரும் இலர். எமது துணைக்கு யாரும் இலர். எம்மை ஆதரிப்போர் யாரும் இலர். எமக்காகக் குரல் கொடுப்போரும் யாரும் இலர். ஆனால், எமது மக்களுக்காக நாம் இருக்கின்றோம் அல்லவா. நாம் இருக்கின்றோம் என்றால், ஊர்வலம் போகின்றோம், கோசங்கள் எழுப்புகின்றோம், நினைவு வணக்கக் கூட்டங்கள் நடத்துகின்றோம், ஆர்ப்பாட்டம் செய்கின்றோம் அல்லது எமது மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய பங்களிப்புச் செய்கின்றோம்.இத்துடன் முடிந்ததா..? நாம் இருக்கின்றோம் என்ற ஆதரவுப் பாத்திரத்தின் பணி.

உண்மையில், புலம்பெயர்ந்து வாழும் மக்களிடத்தே போராட்டத்திற்கான பெரும் பணி காத்துக்கிடக்கிறது என்ற உண்மையை நாம் புரிந்து வைத்திருக்கின்றோமா? சிறீலங்கா அரசு மீதான, பொருளாதாரத் தடையை உலக நாடுகள் ஏற்படுத்தாதா என்று அங்கலாய்க்கின்றோம். சிறீலங்காவிற்கான ஏற்றுமதி வரிச் சலுகையை நீடிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் அழுது மன்றாடுகின்றோம். சிறீலங்கா மீதான தண்டனைத் தடைகளைப் போடுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் நாம்? நாம் எம் விடயத்தில் செயலற்று சோம்பிக் கிடக்கின்றோம்.

சிறீலங்கா அரசை பணியவைப்பதற்கான மிகப்பெரிய துருப்புச் சீட்டு எம்மிடம் இருக்கின்றது என்பது, எமக்கான பலம். அதனை நாம் கையிலெடுப்பதன் மூலம், சிறீலங்கா அரசைப் பணியவைக்கமுடியும். அதிசயிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்த முடியும். சிங்கள இனவெறியர்களின் கொலைப் பிடியில் இருந்து எமது மக்களைக் காப்பாற்ற முடியும்.சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டமே அது!

ஏற்றுமதி வர்த்தகத்தில், எழுபது வீதமான பகுதியை, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலேயே சிறீலங்கா பூர்த்திசெய்கின்றது. தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளே, அதன் பணவேட்டைக்கான காடுகள். வர்த்தகச் செயற்பாடுகள், விமானச் சேவைகள், வங்கிச் சேவைகள் ஊடாக, சிறீலங்கா பெற்றுவரும் அந்நியநாட்டுப் பணமே, சிறீலங்காவின், குண்டு வீச்சு விமானங்களாகவும், பல்குழல் எறிகணை செலுத்திகளாகவும், பீரங்கிகளாகவும், யுத்தக் கப்பல்களாகவும், தமிழர்களை கொத்துக் கொத்தாய் அழிக்கும் கொத்துக் குண்டுகளாகவும், குண்டுகளாகவும், தோட்டாக்களாகவும், நாசகார ஆயுதங்களாகவும் சென்றடைகின்றன.

எமது உறவுகள், எமது குழந்தைகள், துண்டங்களாய் சிதைக்கும் கொடும் கரங்களில், அழிவாயுதங்களைக் கொடுப்பவர்களாக நாம் இருக்கின்றோம் என்ற உண்மையை நாம் உணர்கின்றோமா? தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ நாம் செய்யும் இந்த மோசமான காரியத்தை, இன்றே கைவிடவேண்டும். தனி மனிதர்களாக, தனித்துத் தனித்து... தயங்கித் தயங்கிச் சிந்தித்து, ஒன்றும் உருப்படியாக நடக்கப்போவதில்லை. ஏற்கெனவே இதுபோன்ற ஒரு கருத்துநிலை 2006ம் ஆண்டளவில் உருவானபோதும், அது செயலுருப் பெறவில்லை. தற்போது அவசரமாகச் தேவைப்படுவது கூட்டுச் செயற்பாடு.

இதில் வர்த்தக சமூகம், நுகர்வோர் சமூகம், ஊடக சமூகம் என்பன முழுமையான ஒத்த கருத்துடன் இணைந்து, எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய, தாக்கமான இந்தப் போர் வடிவத்தைக் கையிலெடுக்கவேண்டும். இதனை, நாம், பிரான்சில் தமிழர்களின் வணிக மையமாகக் கருதப்படும் லாச்சப்பலில் இருந்தே ஆரம்பிக்கலாம். தமிழ் மக்களின் விடுதலை வரலாறு எழுதப்படும் போது, லாச்சப்பலில் ஆரம்பித்து, உலகமெல்லாம் பற்றிப் படர்ந்த புறக்கணிப்புப் போராட்டம் என்ற குறிப்பு பதியப்படட்டும்.

இங்கே, இனவுணர்வுள்ள வர்த்தக சமூகம், வர்த்தக சங்கம் வாய்க்கப்பெற்றிருக்கின்றது. அண்மைக்காலமாக தமிழ் வர்த்தக சங்கத்தின் செயற்பாடுகள், போற்றுதற்குரியவை. பிரான்ஸ் வர்த்தக சமூகத்தின் தன்னெழுச்சியான செயற்பாடுகள், ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாய் அமைந்துள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். மக்கள் கொதி நிலையில் இருக்கின்றார்கள். இன அழிப்பில் இருந்து எம்மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற அங்கலாய்ப்பில் இருக்கின்றார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாய், இளம் தலைமுறை, எழுச்சிகொண்டு நிற்கிறது.புலத்து மண்ணில் பிறந்து வளர்ந்த இளம் சந்ததி, தன் இனத்தின் பாரத்தை, தனது தோள்களில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்திருக்கின்றது. விட்டேந்தி விடலைகளாக, வம்பு பண்ணாமல், தியாகங்களைப் புரியத் தலைப்படுகின்றது. அர்ப்பணிப்பு மனோ நிலையுடன், ஒரு சந்ததித் தொடராய், போராட்டத்தை பாதுகாத்து முன்னே நகர்த்த முனைப்புடன் முன்நிற்கின்றனர். ஒழுக்கமும், நற்பண்புகளும், பொறுப்புணர்வும் மிக்க பிள்ளைகளைப் பெற்ற மனோநிலை, புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு.இவ்வளவும் போதும், நாம் வரலாறு படைக்க. எமது தாயக விடுதலைப் போராட்டம் வெற்றிபெறும். எமது விடுதலை இயக்கம், எமது மக்களுக்கான சுதந்திர வாழ்வை மீட்கும்.

உலகமெலாம் பரவிவாழும், தமிழர்கள், தமக்கான ஒரு நாட்டை அமைத்தே தீருவர். அதற்காக நாம் இன்றே கடமையில் இறங்குவோம்.வர்த்தக சங்கம், ஒரு ஒன்றிணைந்த அமைப்பாக இருப்பதால், எல்லா வர்த்தகர்களையும், இறக்குமதியாளர்களையும் ஒன்றாய் இணைத்து, சிறீலங்காப் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை, சிறீலங்காப் பொருட்களை விற்பதில்லை என்ற பொது முடிவை எடுக்கவேண்டும். இதற்கு மாற்று வியாபார முறைமைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.இதற்கு ஒரு மாத கால இடைவெளி கொடுத்து, சிறீலங்காப் பொருட்களை இறக்குவதையும், விற்பதையும் முற்றாக நிறுத்தவேண்டும். இந்தப் பொது முடிவுக்கு மாறாகச் செயற்படும், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் புறக்கணிக்கப்படவேண்டும்.(இதி
ல் தனிமனித பாதிப்புக்களைக் கருத்தில் எடுக்க முடியாது. இனத்தின் நலனே தற்போதைய நெருக்கடியான நிலையில் கருத்தில் எடுக்கப்படவேண்டியுள்ளது.)

இங்கு நுகர்வோர் சங்கம் இல்லாத காரணத்தால், பொதுமக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்த வேண்டியது, இளம் தலைமுறையின் கடமை. லாச்சப்பலில், பொழுது போக்கிற்காகக் கூடும், இளைஞர்கள் கூட, இந்தப் பணியை தன்னெழுச்சியாக மேற்கொள்ளமுடியும். எமது இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் வன்முறையற்ற, சுய ஒறுப்புப் போராட்டம். இதில் எந்தச் சட்ட மீறலுக்கும் இடமில்லை.

முப்பதுகளில், இந்திய தேசபிதா மகாத்மாகாந்தி பிரித்தானியர்களுக்கு எதிராக, துணிவகை உட்பட, இறக்குமதிப் போருட்களைக் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினார். கை றாட்டை கொண்டு, கதர் துணி தயாரித்தார். ஐம்பத்தைந்தில், அமெரிக்காவில், மாட்டின் லுாதர் கிங் தலைமையில் கறுப்பின மக்கள் அரச பஸ் போக்குவரத்துச் சேவையைப் புறக்கணித்தனர். கால்நடையாகவே பயணங்களை மேற்கொண்டனர். தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக, உலக நாடுகள், அந்நாட்டை புறக்கணித்தன (வர்த்தகம், விளையாட்டு உட்பட)ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை காரணம் காட்டி, மொஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியை, எண்பதாம் ஆண்டு அமெரிக்கா புறக்கணித்தது. எண்பத்தி நான்கில் லொஸ் ஏஞ்சலில் நடத்த ஒலிம்பிக் போட்டியை பதிலுக்கு சோவியத் யூனியன் புறக்கணித்தது. இஸ்ரவேலின் பலஸ்தீனத்துக்க எதிரான போரை எதிர்த்து, அரபு நாடுகள் ஒன்றிணைந்து, புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்தன. இஸ்ரேல் தயாரிப்புப் பொருட்களையும், இஸ்ரேலிய நிறுவனங்களால் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களையும் அவை புறக்கணித்தன.

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு, ஈராக் மீதான தமது யுத்தத்திற்கு துணைக்கு வரவில்லை என்ற கோபத்தில், அமெரிக்கர்கள் பிரெஞ்சிப் பொருட்களைப் புறக்கணித்தனர். பிரெஞ்சுத் தயாரிப்பு வைன் சீஸ் போன்றவற்றை அவர்கள், குப்பைத் தொட்டிகளில் வீசினர். அமெரிக்காவின் முஸ்லீம் நாடுகள் மீதான போர்களை எதிர்த்து, முஸ்லீம் மக்கள் கொக்கோகோலா பானத்தை புறக்கணித்தனர். அதற்குப் பதிலாக மெக்கா கோலா என்ற பானத்தை அறிமுகப்படுத்தினர். இப்படியாக, உலக வரலாறுகளில் புறக்கணிப்புப் போராட்டங்கள் பல நடந்திருக்கின்றன. நடந்துகொண்டிருக்கின்றன. அவை பல தாக்கமான அதிசயிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுமிருக்கின்றன .நாமும், சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணித்து, வரலாற்றில் ஒரு தாக்கமான விளைவை ஏற்படுத்துவோமா? ஏற்படுத்துவோம்! என்று முடிவெடுத்துச் செயற்படுவோம்.

வாசகன்

சுப்பு

நன்றி ஈழமுரசு(2008)

Sunday, June 28, 2009

சின்னாபின்னமாகும் பெண்ணுரிமை!

ஆடைக்கட்டுபாடுகள் திணிக்கப்படும்போதெல்லாம் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்ணுரிமைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள் பெண்கள். நாளேடுகளும் ஏதோ தங்களால் முடிந்த பெண்ணுரிமை கருத்துக்கள் என்று பெண்ணுரிமைக்கு போனஸாக மேலோட்டமாக பெண்ணியவாதிகள் கவிஞர்கள் கருத்துக்களை மேற்கோள் வைத்து எழுத்து வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள். அதை வைத்து ஒரு கூட்டம் காரசாரமாக விவாதத்தை தொடங்கும். நாலு பிரபலங்களிடம் பெண்ணுரிமைக் கேள்விகள் கேட்கப்படும். அதை வைத்து இன்னுங் கொஞ்ச நாள் பெண்ணுரிமை ஓடும். அப்பறமென்ன சிலநாட்களில் பெண்ணுரிமைகள் காணாமல் போய்விடும்.

ஆடைக்கட்டுப்பாடுகள் குறித்த பிரச்சனைகள் தமிழகத்தில் வரும்போதெல்லாம் தமிழகத்தில் இருக்கும் பெண்ணியவாதிகள் சில நாட்கள் எழுத்துப் போர் புரிவார்கள். ஏதோ அடக்குமுறை திணிப்பு உரிமைகள் ஒடுக்கப்படுகிறது விடமாட்டோம் என்று குதிப்பார்கள். அதுவும் வந்த வழி தெரியாமல் போய்விடும்.

சமூகத்தில் தினம் தினம் ஏதோ ஒர்வகையில் பிரச்சனைகள் பெண்களுக்கு இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இருப்பினும் அவை சகிப்புத்தன்மையாக மாறிவிடுகிறது. ஆனால் ஒட்டு மொத்த பெண்களும் உடைக்கட்டுபாடு என்று வரும்போது மட்டும் பெண்ணுரிமை ஞாபகத்திற்கு வந்துவிடும்.

இது ஆணாதிக்க உலகம். இந்த ஆண்கள் பெண்களை அடக்கி ஒடுக்கி வைப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். அதனால் தான் எங்களால் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை என்று பெண்கள் குமுறுவார்கள். இது பெண்ணுரிமை கேட்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதே பல்லவிதான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் ஆணாதிக்கம் என்ற ஒரே பார்வையோடு விமர்சித்துக் கொண்டிருப்பதை விட்டு வேறு கோணத்தில் சிந்திக்க தோன்றுவதால் இந்த ஆணாதிக்கத்தை கொஞ்சம் ஓரங்கட்டி வைப்போம்.

பெண்களுக்குள்ளேயே ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் பல குழப்பங்கள் இருக்கிறது. புடவைகள் சுடிதார் பேண்ட் சர்ட் உடைகள் குறித்து பெண்களுக்குள் இருக்கும் விமர்சனங்களையும் ஒதுக்கி வைப்போம். குறிப்பாக கணவன் வருமானத்தில் ஜீவிக்கும் பெண்கள் நிலையை விட்டுவிடுவோம். அவர்களுக்கு ஏதோ வீட்டு வேலை பார்த்தோமா, சீரியல் பார்த்தோமா, கணவன் வருடத்திற்கு இரண்டு புடவையை எடுத்துக் கொடுத்தானா தின்னமா, தூங்கினோமா, அடுத்த வீட்டுக்காரியை பற்றி இன்னொருத்தியுடன் குறை சொல்லி காலத்தை ஓட்டினோமா என்று வாழ்ந்துவிட்டு போகும் ரகம்.

இன்னொரு பெண்கள் கூட்டம் இருக்கிறது. இலக்கியப் பெண் படைப்பாளிகள். இந்த அறிவு ஜீவிகளுக்குள்ளேயே பெண்ணிலைப்பாடுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருக்கிறது. பழைய பஞ்சாங்கம் ஒருவகை என்றால் இன்னொன்று பெண்ணிய கட்டுடைப்புகளை எப்படி கட்டுடைப்பது என்பதில் சொதப்பும் வகை. கவிதையாலே பெண்ணியபுரட்சி நடத்திக் கொண்டிருப்பார்கள். உதவாக்கரைகள் ஒன்று சேர்ந்து மாதர் சங்கம் நடத்துவதைப் போன்றது. இந்தக் கூட்டத்தால் இளைஞிகள் பெண்ணுரிமையை தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

சென்ற வருடம் கனடாவில் நடந்ததே ஒரு கூத்து.

தமிழ்பெண்கள் அமைப்பு நடத்திய பெண்ணுரிமை கூட்டம். உள்ளாடைப் புரட்சியில் பெண்ணுரிமை இருக்கிறதாம். ஜட்டி, பாடி எல்லாவற்றையும் தொங்கவிட்டு கூட்டம் போட்டார்கள். இந்த அமைப்புக்கு கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்நாட்டு இலக்கிய பெண்ணியவாதி ஒருவர் சொல்கிறார்: "பெண்ணுரிமை யோனி (பெண்குறி) கட்டுடைப்பில் இருக்கிறதாம்." இந்த பெண்ணியக்கூத்து இப்படியென்றால்....

இன்னொரு கூத்து இருக்கிறது.

அனேக திரைப்படங்களில் வரும் வசனம் தான். உதாரணத்திற்கு ´இளைய தளபதி என்னும் பொறம்போக்கு´ குடுத்த ஆக்ட்டுக்கு துட்டை சம்பாதித்துக் கொண்டு போவோம் என்றில்லாமல் பெண்களுக்கு பெண்ணுரிமையைப் பற்றி அடிக்கடி பாடமெடுக்கும் ரகம். (தமிழ் திரைப்படங்களில் எல்லா நடிகர்களும் பெண்ணுரிமைக் குறித்து பாடமெடுத்தாலும் இந்த பொறம்போக்குக்கு இளைஞிகள் அதிக விசிறிகளாக இருப்பதால் சுட்டிக்காட்ட முற்படுகிறோம்.)

ஆண்மொழியில் ஓர் பெண்ணிய விமர்சனம்!

பெண்களுக்கு முன் வைக்கப்படுகிறது. அதை பெண்ணிலைவாதிகள் எப்படி எதிர்கொண்டார்கள்?

பையன் ஏதோ நல்லவனாட்டம் இருக்கான். ரொம்ப பெண்ணுரிமையெல்லாம் அழகாக ஸ்டைலாக எடுத்துவிடுகிறான் என்று மெச்சிக் கொள்வார்களா?

பெரியார் சொல்வார் :

நம் தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் மாபெருங்கேடாய் இருந்துவரும் மற்றொரு காரியம் சினிமா, நாடகம் முதலிய நடிப்புக் காட்சிகளாகும். இவை இசையைவிட கேடானவையாகும் என்பது என் கருத்து. நம் தமிழ்நாடு மானமுள்ள நாடாக, மானத்தில் கவலையுள்ள மக்களைக் கொண்ட நாடாக இருந்திருக்குமானால் இந்த நாடகம், சினிமா முதலியவை ஒழிந்து கல்லறைகளுக்குப் போயிருக்கும். இதை நான் வெகு காலமாகச் சொல்லி வருகிறேன். இசையினால் காது மூலம் உடலுக்கு விஷம் பாய்கிறது. நடிப்பினால் காது, கண் ஆகிய இரு கருவிகள் மூலம் உடலுக்குள் விஷம் பரவி இரத்தத்தில் கலந்து போகிறது. இவ்வளவு பெரிய குறைபாடும், இழிவும் உள்ள நாட்டுக்கும், மக்களுக்கும் இன்று கடவுள் பஜனையும், கடவுள் திருவிளையாடல் நடிப்பும்தானா விமோசனத்துக்கு வழியாய் இருக்க வேண்டும்?

நாடகம் எதற்கு? அது படிப்பிக்கும் படிப்பினை என்ன? அதற்காக ஏற்படும் செலவுகள் எவ்வளவு? புராணக் கதைகளை நடிப்பதினால் அனுபவிப்பதால் மூட நம்பிக்கை, ஒழுக்க ஈனம், கட்டுத்திட்டமற்ற காம உணர்ச்சி, கண்ட மாத்திரத்தில் காம நீர் சுரக்கும்படியாகப் பெண் மக்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளுதல் முதலியன பிடிபடுவதல்லாமல் வேறு என்ன ஏற்படுகிறது.

பெரியார்.
(தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு என்ற புத்தகத்தில் இருந்து. பக்கம் : 66)

இந்த சினிமாக்காரர்களால் சமூகத்தை குட்டிச்சுவராக ஆக்குவதைத் தவீர வேறு என்ன செய்திருக்கிறது? இப்படிப்பட்ட துறையைச் சார்ந்த ஒருவன் பொது மக்களில் ஒருபால் இனத்தினரை கேவலப்படுத்தி பேசினால் பொறுத்துக் கொண்டிருப்பதா? ஆனால் இதையெல்லாம் பெண்கள் பொறுத்துக் கொள்கிறார்களே!

குஷ்புக்கு துடைப்பக்கட்டையையும் செருப்பையும் தூக்கிக் கொண்டு போன பெண்கள் இளைய தளபதிக்கு தூக்கிக் கொண்டு போனால் அடுத்த படத்தில் அந்த பொடியன் பேசுவானா? "பொம்பளைக்கு அட்வைஸ் பண்ணிட்டு தோளும் தோளும் தான் உரசறா மேலும் கீழும்தான் இழுக்கிறா?"ன்னு டுயட் பாடுவானா?

நம் பெண்களிடம் எங்கேயோ கோளாறு இருக்கிறது. சகிப்புத்தன்மை மிகுந்து போயிருக்க வேண்டும். அல்லது இதுபோன்ற அட்வைஸ்சுக்களையும் திட்டுக்களையும் கேட்டு கேட்டு பழகிப் போய்விட்டதால் எவனோ ஒரு பொறம்போக்கு சொல்லும் போது இவன் என்னத்தை புதுசா சொல்லிட்டான்னு பெருந்தன்மையாக விட்டு கொடுத்துவிடுகிறார்களா என்பது நமக்கு புரியவில்லை.

இப்படி எல்லாத்துறைகளிலும் பெண்கள் அசிங்கப்பட்டு கொண்டிருக்கும் போது குறிப்பாக இளம் பெண்கள் (இவர்களில் அனோகர் பொறம்போக்குக்கு விசிறிகள் வேறு) அலட்சியமாக பார்த்து இரசித்துக் கொண்டிருந்துவிட்டு ஆடை கட்டுப்பாடுகள் என்று ஏதாவது பிரச்சனை வந்தால் போதும். பெண்ணுரிமை பெண்ணுரிமை என்பார்கள்?

எது பெண்ணுரிமை? மேக்கப் ஜாமான்களிலும், மாடல் உடையிலும் தான் இவர்கள் பெண்ணுரிமை பேசுகிறார்கள். இந்த அறியாமை எப்படி வந்தது இவர்களுக்கு..

எத்தனை பெண்களுக்கு பெண்ணுரிமை என்றால் தெரிகிறது?

சமீபத்தில் மரணமடைந்த கமலா தாஸ் என்ற பெண்ணிய இலக்கியவாதியைப்பற்றி சக ஆண் இலக்கியவாதியான எழுத்தாளர்
ஜெமோகன் சொல்கிறார்

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”

எவ்வளவு வக்கீரம் பிடித்த விமர்சனம். எத்தனை பெண்கள் எதிர்த்தார்கள்? பிரபலான பெண்ணிய எழுதாளரின் மரணத்தில் இப்படியொரு அடையாளத்துடன் பெண்ணிய எழுத்துக்கள் விமர்சிக்கப்படும் போக்கு ஐரோப்பாவில் நடந்திருந்திருந்தால் பெண்ணியவாதிகள் ஒரு பிடிபிடித்து மானநஷ்ட வழக்கு போட்டிருந்திருப்பார்கள்.

மானமாவது மசுறாவது அதெல்லாம் எங்களுக்கு கிடையாது என்றால் எப்போதாவது வரும் உடைக்கட்டுப்பாடு பிரச்சனையில் மட்டும் பெண்ணுரிமை பற்றி பேசிவிட்டு போக வேண்டியது தான். அதிலாவது உருப்படியான செயல்பாடுகளை பெண்ணிலைவாதிகளால் எடுக்க முடிகிறதா? சும்மா புலம்புவதிலும் கவிதை எழுதுவதிலும் உரிமை பேசிவிட்டு போய்விடுவார்கள். எத்தனை பேர் செயலில் இறங்கி கடைசி வரை போராடி வெல்கிறார்கள்?

ஆறுகோடி தமிழர்களிடையே 3-கோடி தமிழ்பெண்கள் இருந்தால் கூட தமிழகத்தில் இதுவரையில் உருப்படியான பெண்ணிய சிந்தனைகளை செயல்படுத்திய பெண்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?

எப்போதும் பெண்ணுரிமைகளில் தெளிவான நிலைப்பாடுகளோ உறுதியான போராட்டங்களோடு போராடி பெண்களுக்கு தேவையான உரிமைகளை பெண்களே வென்றெடுக்காமல் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கும் வரையில் பெண்ணுரிமையின் சித்தாந்தம் போலித் தன்மையில் இயங்கிக் கொண்டு பெண்களாலேயே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும்.

நன்றி தமிழச்சி

Wednesday, June 24, 2009

இந்திய அரசியல்-தமிழக இந்திய அரசியல் வியாதிகள்-மக்கள் போராட்டம் -ஒர் பார்வை

மக்கள் போராட்டம்:(உண்ணா விரதம்-பேரணி -பொது கூட்டம்- சாலை மறியல்-தீக்குளிப்பு)
தெரிந்தோ தெரியாமலே இந்த இந்தி தேசியத்தில் உள்வாங்க பட்ட தமிழர்களாகிய நாம் இதை செய்தால் அரசாங்கம் நம்மை கண்டுகொள்ளும் ஏதாவது செய்யும் என பழக்கபடுத்திவிட்டார்கள். இன்று அந்த பழக்கமே மக்களிடம் மேலோங்கி உள்ளது. ஆனால் முக்கிய பிரச்சனைகளில் அதாவது இனம் சார்ந்த பிரச்சனைகளில் இதுவும் செல்லுபடியாகாது என ஈழ பிரச்சனையில் நாம் கண்டு கொண்டோம். சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தும் எவனும் கண்டு கொள்ளவில்லை.ஏதோ காந்தி தமிழ்நாட்டுக்கு வந்தார் தமிழக விவசாயிகள் கோவணத்தோடு இருப்பதை கண்டு தானும் கோவணத்தினை உடுத்தி கொண்டார் ..அவர் அறிமுகபடுத்தியது தான் அகி’இம்சை’வழி என அதை பின்பற்றுதலை நிறுத்தி கொள்ள் வேண்டும். எங்கோ ஒரு சீக்கிய சாமியார் கொலை செய்யபட்டதால் மொத்த பஞ்சாப்பும் தீப்பற்றி கொண்டதே ஏன்? எவனோ செய்த கொலைக்கு பிரதமர் வரை மன்னிப்பு கேட்டரே? 50.000 மேற்பட்ட மக்கள் இந்தியா ஆசியுடன் கொன்றொழிக்கபட்டதிற்கு மன்னிப்பு கேட்பாரா?
மாற்றத்திற்கான வழி:
மக்கள் போராட்டம் என்பது இந்த இம்சை பாதையை
விட்டு வெளியில் வரவேண்டும் டெல்லி வாலாக்கள் செவுளில் நாலு அறைந்தாற்போன்று இருக்கவேண்டும். தமிழக மக்கள் தங்கள் போராட்ட பாதையை மாற்ற வேண்டும்!
இந்தி அரசியல் வியாதிகள்(கவலையளிக்கிறது-வருத்தமளிக்கிறது- நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம்)
இந்த மேற்கூறிய வாசகங்களை படித்தாலே முழு அரசியல்வியாதிகள் ஆகிவிடலாம்.உண்மையில் இந்த இந்திகாரன்கள் தங்கள் மாநிலங்களின் பிரச்சனைக்கோ அல்லது தங்களது சமூகத்தவர்களுக்கு வெளி நாடுகளில் ஏற்படும் பிரச்சனைக்கோ இந்த சொல்லை உபயோகிப்பது இல்லை. நேரடியாக செயலில் இறங்குவதுதான் இவர்களது பாலிசி.மலெசிய தமிழர் போராட்டதில்
இருந்து வளைகுடா நாடுகளில் தமிழர்கள் சிறையில் வாடிய போதும் இவர்கள் கூறியது மேற்கூறியவார்தைகள் தான். அதாவது இவர்களுக்கு அன்னிய செலவாணியை ஈட்டி தரும் எ.டி.எம் மிஷின் தானே தமிழர்கள்!தமிழீழத்தில் இருந்து தினம் தினம் 100க்கும் மேல் நமது உறவுகளை குண்டு வீசி கொலை செய்யும் இலங்கை அரசினை கண்டித்தும் அதற்கு முண்டு கொடுக்கும் இந்தி அரசினை கண்டித்தும் இங்கு கக்கூசு கழுவுபவர்கள் முதல் காய்கறி கடைக்காரர்கள் வரை போராடி பார்த்தாகிவிட்டது ஆனால் இந்தி அரசு இம்மியளவும் நகர்கிற வழி தெரியவில்லை.தமிழினத்தின்
இந்த நிலைமைக்கு காரணம் என்ன?இந்தி அரசின் சட்டதிட்டங்களும் மற்றும் அதை நடைமுறைபடுத்தும் இந்திய ஆட்சியாளர்களே ஆகும்!
இந்த இந்தி ஆட்சியமைப்பு முறையில் சராசரி ஒரு சிங்கும் ஒரு தமிழனும் ஒரு கோரிக்கை மனுவோடு புதுடெல்லியில் உள்ள எதாவது ஒரு மத்திய அரசின் அமைச்சகத்தின் முன் நிற்கட்டும் யாருடைய மனு முதலில் பரிசீலிக்கபடும் என்பது நான் சொல்லிதான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை…ஏன் தமிழனுக்கு இந்திகாரனிடம் கெஞ்சி கூத்தாட வேண்டிய நிலைமை?எத்தனை சிங்குகள் மலையாளிகள் இப்போது அவர்கள் கோரிக்கைக்காக
உண்ணாவிரதம் இருக்கிறார்கள்?

மாற்றத்திற்கான வழி:
சுயநலமற்ற தலைவர்களை எம்.பிக்களாக தேர்ந்தெடுப்பது.. வெளியுறவு மற்றும் முக்கிய பதவிகளை கேட்டு பெறுவது.. அதே பாணியை நாமும் பின்பற்ற வேண்டும் ..சில காலத்திற்காவது அவர்களை முக்கிய பிரச்சனைகளில் காக்க வைக்கவேண்டும். அப்போதுதான் நாமும் மனிதர்கள் என உணர்வார்கள்.நம்முடைய வேதனையும் வலியும் அவர்களுக்கு புரியும்.

தமிழக அரசியல் வியாதிகள்:(தந்தி-தபால்-பொதுகுழு- செயற்குழு -அனைத்துகட்சி கூட்டம்-மத்திய அரசிற்கு தீர்மானம்)
தமிழக அரசியல் வியாதியாவதற்கு மேற்குறியவைகள் இருந்தால் போதும் வியாதி ஆகிவிடலாம் எவன் தமிழ்நாட்டில் இருந்து தந்தியடித்தாலும் அது எங்கு செல்லும் என இங்குள்ள வியாதிகளுக்கு நன்றாகவே தெரியும்.. ஆகா தமிழ்நாட்டில் இருந்து தந்தி தபால் வந்ததா.. மிளகாய் பஜ்ஜியை அதில் வைத்து சாப்பிடுவோம் என இந்திகாரன் சாப்பிடுவான் என அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் ஏன் அதையே தொடர்ந்து செய்கிறார்கள்?இது புரியாமாலா இங்கு கட்சி நடத்தி கொண்டு உள்ளார்கள்? இது அவர்களுக்கும் தெரியும்!பாக் சல சந்தியின் அந்தபுரம் இருந்தாலேன்ன இந்த புறம் இருந்தாலென்ன?தமிழர்கள் எதிரிகளே என இந்தி அரசு செயல்படுகிறதுஇவர்களுக்கு தமிழினத்தை புது டெல்லி ஏகாதிபத்தியதிற்கு எம்.பி சீட்டுகளாக மாற்றி யார் அதிக விலைக்கு விற்கிறார்கள் என்பதில் இவர்களுக்குள்ளே அறிக்கை அக்கபோர் சண்டை ஆகியவை ஏற்படுகின்றன.. புது டெல்லி இந்திக்காரன் வீசி எறியும் எலும்பு துண்டுகளுக்காக பதவி பணம் என ஒரே கொள்கை உடையவர்களாக உள்ளார்கள்!

சரி இவர்களை மாற்ற என்ன வழி?
1)ஒரு மாதம் இன உணர்வை கற்க சிங்களவனிடமோ அல்லது மாராத்திகாரனிடமோ அல்லது கன்னடகாரனிடமோ ஒரு புரோகிறாம் போல செட் பண்ணி அனுப்பி வைக்கலாம்.
2)மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் உடன் அனுப்பலாம்..
3)தமிழ் ரத்தம் ஓடுகிறதா என ப்ள்ட் செக்கப் செய்யலாம்..
4)தமிழர் வேறு மாநிலங்களில் தாக்கபடும் போது மக்கள்காவல் படையாக தமிழர்களை காக்க இவர்களை நியமிக்கலாம்.
5)வடக்கத்தியானுக்கு விளக்கு பிடிக்கும் வேலைக்கு நியமிக்கலாம்..
6)இந்தி கம் தமிழ் டிரான்சுலேட்டராக கூலி வேலைக்கு நியமிக்கலாம் அப்போது தான் தமிழர்களை எப்படி மதிக்கிறார்கள் என தெரியவரும்–இத்தனைக்கு பிறகும் இவர்கள் சரிவர வில்லை என்றால் மொத்த ரத்ததையும் உறிஞ்சிவிட்டு இந்திகாரன் ரத்ததை ஏற்ற வேண்டும்!மக்களுக்காக:(மானாட மார்பாட- கலக்க போவது யாரு-
சீரியல்கள்-இலவசங்கள்)தமிழக மக்கள் தங்களுக்கு எதிராகத் திரும்பி விட மாட்டார்கள். அப்படித் திரும்பாத வேலையைத் ஒருவருக்கு ஒருவர் கழுதறுத்து தமிழகத் திராவிடக் கட்சிகளே அவற்றின் ‘தொல்லை’காட்சிகளே பார்த்துக் கொள்ளும் என்கிற நம்பிக்கையிலும் தெம்பிலும்தான், இவர்கள் தமிழர் பிரச்சினைகளை பற்றி கவலைப் படாமலும், அதில் அக்கறை காட்டாமலம் இருப்பது மட்டும் அல்ல, தமிழர்களுக்கு எதிராகவும் இந்திய ஆட்சியாளர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.குறைந்த பட்சம் நம்முடைய தாய்மார்களுக்கு குடிசை தொழில் அல்லது நடுத்தர வர்க்கமானல் இணையத்தின் வழி எத்தனையோ முறைகளில் சம்பாதிக்க வழி உள்ளது. அவற்றினை கற்று கொடுங்கள்.இந்த சீரியல்கள் மற்றும் பிற ஈழவுகளில் இருந்து விடுபட செய்யுங்கள்.மராத்திய வீரன் சிவாஜியை அவனுடைய தாயார் உருவாக்கியது போன்று நம்முடைய தமிழ்நாட்டிலும் ஒரு இனத்திற்காக போராடும் ஒப்பற்ற வீரனை நம்முடைய தாய்மார்களாலும் உருவாக்க முடியும்.ஒரு சீக்கிய இனத்திற்காக போராடிய பிந்துவாலேவிற்காக ..எங்கே நம்மை விட்டு பிரிந்து போய்விடுவார்களோ என இந்தி அரசு அவர்களை கண்டால் நடுங்குகிறது. எதிரியே நமது ஆயுதத்தை தீர்மானிக்கிறான். எந்த காரணம் சொல்லி இந்த அரசு ஈழ தமிழர்களை கொன்று ஒழித்ததோ அதே ஆயுதத்தை நாமும் ஏந்துவோம் ! நம்முடைய பிரச்சனைகளுக்கு, ஈழ தமிழரின் வாழ்வுரிமைக்ககும்!!

Tuesday, June 23, 2009

இனிவரும் போர்...?

வணக்கம்
அன்பான ஊடக நண்பர்களே, தமிழ் உறவுகளே..!!!!விவாதங்களும்,குழப்பங்களும்,சலசலப்புகளுமாய் ஓடும் தமிழினத்தின் கால ஓட்டத்தில் அதன் தேவை அறிந்து உணர்வுகளை சொல்ல வருகிறான் "பருத்தியன்".அவன் உணர்வுகள் உங்களின் மனதை தொட்டால் மற்றவர்களும் அறியும்படி செய்யுங்கள்.
நன்றி
கௌதம் ராஜா..

இனிவரும் போர்...?
ஈழத் தமிழினத்தினைப் போல பாவப்பட்ட வேறொரு இனம் தற்போது இருக்கமுடியாது. அந்தளவுக்கு பலவந்தமாக அவலப்படுத்தப்பட்ட இனமாகவும், சர்வதேசத்தினால் முற்றுமுழுதாகக் கைவிடப்பட்ட ஒரு இனமாகவும் ஈழத் தமிழினம் போய்விட்டுள்ளதென்பது சோகத்திலும் சோகமான விடயம்.
உலகநீதி கூறுவோரினதும்... மனிதாபிமானம்,மனிதநேயம் பற்றி பேசுவோரினதும்... காந்தியம்,அகிம்சை,கொல்லாமை பற்றி வாய்கிழிய கத்துவோர்களினதும் முன்னிலையில், அவர்களின் ஆசீர்வாதத்துடனும் முழு ஒத்துழைப்புடனும் தமிழினம் மிகக் கொடூரமாக கொன்றொழிக்கப்பட்டதென்பது மனிதகுலமே வெட்கித் தலைகுனிய வேண்டிய விடயம்.
அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமா அவர்கள் ஒரு ஈயை தன் கையால் அடித்துக் கொன்றுவிட்டார் என்பதற்காக அமெரிக்க ஜனாதிபதிக்கெதிராகவே கண்டனங்கள் தெரிவித்த இரக்கமிக்கவர்களின் கண்களுக்கு, ஈழத்தமிழர்கள் துடிதுடிக்க கொன்றொழிக்கப்பட்டது தெரியவில்லையா? அல்லது ஒரு ஈயை விடக் கேவலமானவர்கள் தமிழர்கள் எனக்கருதி அதை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையா???

விலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்து அவற்றின் சுதந்திரத்தினைப் பறிப்பதற்கே பாய்ந்தடித்து,பதறியடித்துக் கொண்டு கண்டன அறிக்கைகள் விடும் ஈரநெஞ்சத்தவர்கள் , புனர்வாழ்வு முகாம் என்ற பெயரில் உருவாக்கப்பட்டிருக்கும் சிங்கள அரசின் கொலைக்கூண்டுகளில் எந்த அடிப்படை வசதியுமின்றி, சுதந்திரமுமின்றி அடைக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தப்படும் அப்பாவித் தமிழர்கள் விடயத்தினைக் கண்டுகொள்ளாமல் கல்நெஞ்சக்காரர்களாக இன்னும் இருப்பது ஏன்???

இவை மட்டுமல்ல... பல்வேறு சந்தர்ப்பங்கள், சம்பவங்களுடன் ஒப்பிட்டு நோக்கும்போது... ஈழத்தமிழர்கள் ஒட்டுமொத்த சர்வதேசத்தினாலும் திட்டமிட்டு ஒதுக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது தெட்டத்தெளிவாகின்றது.பாரபட்சமான உலகநீதிக்குள் பழிவாங்கப்பட்டிருக்கின்றது ஈழத்தமிழினம்.
தமிழர்களிற்கு அழிவை ஏற்படுத்தியவர்கள் வெளிப்படையான குற்றவாளிகள் என்றால், அதைத் தடுக்க வழிகள் இருந்தும் அதைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களும் மறைமுகமான குற்றவாளிகளே!.

வல்லரசு வல்லூறுகளின் பிராந்திய வல்லாதிக்கப் போட்டிகளின் நடுவே சிக்குண்டு சின்னாபின்னமாகிப் போனது ஈழத் தமிழரின் வாழ்வு. வளமாய் வாழ்ந்த இனம் இன்று தன் வாழ்வைத் தொலைத்து நிற்கின்றது.

இந்தியா,சீனா,ரஷ்யா,அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் சுயநலன்களுக்கு அப்பாவித் தமிழினம் இரையாகி இழந்தது அதிகம்.

குறிப்பாக இந்தியாவின் பழிவாங்கல் துரோகத்தனத்தினை என்றுமே ஈழத்தமிழினம் மறக்காது, மன்னிக்காது. அரவணைக்கும் என்று நம்பியிருந்தவர்களின் எதிபார்ப்பையும் எதிர்காலத்தையும் அழித்தொழிக்க சிங்களத்தோடு கூடிநின்று குழிபறித்தது.சந்தர்ப்பம் பார்த்து ஈழத்தமிழர்களின் முதுகில் குத்தியது.சிங்களவெறியர்களின் கொலைவெறியாட்டத்தினை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது சோனியா அம்மையார் தலைமையிலான இந்தியக்காங்கிரஸ்அரசு. புலிகள் ஒழிக்கப்பட்டுவிட்டார்கள் என்பதை நினைத்து அகமகிழ்ந்து தன் கணவர் இராஜீவ் காந்தியின் சமாதியில் கடந்த மே 21 இல் அவரது நினைவு தினத்தன்று மனநிறைவோடு அஞ்சலி செலுத்தினாராம்.
அதற்கு அவர் பலியெடுத்த அப்பாவித் தமிழ்மக்களின் உயிர்கள்தான் எத்தனை ஆயிரம்?
அதைவிட சீனாவின் ஆதிக்கப் போட்டியார்வத்தில் அது சிங்களத்துக்கு அள்ளிக் கொடுத்த கொத்துக் குண்டுகளில் கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டது தமிழினம். "பொய்வித்தை வியாபாரி" சீனாவின் வர்த்தக, வல்லாதிக்க நோக்கத்தினால் நொடிக்கப்பட்டது அப்பாவித் தமிழினந்தான்.
இவையோடு சேர்த்து ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் தென்னாசிய நாடுகள் பலவும் சிங்களத்தோடு கூட்டுச் சேர்ந்து ஈழத்தமிழரின் குரல்வளையறுக்க கூடித் திட்டம் போட்டன.

அமெரிக்காவும்,மேற்குலக நாடுகளும் இதில் குறைவைக்கவில்லை. அவையும் தம் பங்கிற்கு தமது அதிகாரத்தினை ஆசியப் பிராந்தியத்தில் நிலைநிறுத்த தம்நிலை மறந்து தாளம் போட்டன. இவர்களின் இரட்டை வேட நாடகங்களின் மத்தியில் தன் கொலைவெறியாட்டத்தினை கச்சிதமாக நடத்தி முடித்திருந்தது சிங்களம்.

பல்லாயிரக் கணக்கான தமிழ்மக்களைக் கொன்று குவித்த பின்னரும் சிங்களத்தின் கொலைவெறி இன்னும் அடங்கவில்லை.
தினமும் கொலைகள்,கடத்தல்கள்,காணாமல்போதல்கள்,கைதுகள்,
சித்திரவதைகள் என்பன இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

ஈழத்தமிழரின் பாரம்பரிய விழுமியங்கள், அடையாளங்களை இல்லாதொழிப்பதில் சிங்களம் கருத்தாய் செயற்படத் தொடங்கியிருக்கின்றது. தமிழ்மக்களின் பிரதேசங்களை பெளத்த சிங்கள மயமாக்குவதுடன், தமிழர்களுக்கான ஒரு ஆளுமைமிக்க தலைமையை இல்லாமற் செய்வதன்மூலம் தமிழர் என்ற தனித்துவத்தினை,அதிகார பிரதிநிதித்துவத்தினை இழக்கச் செய்வதும், இளம் சமுதாயத்தினர் மத்தியில் கலாச்சாரச் சீரழிவினை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் விடுதலையுணர்வை அடியோடு இல்லாமற் செய்வதற்கும் முன்னெடுப்புக்கள் நடக்கின்றன.

மொத்தத்தில் இலங்கையில் தமிழினம் என்பது ஒரு தனித்துவ அடையாளமில்லாத அடிமைப்படுத்தப்பட்ட இனமாக ஆக்கப்படக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. இதையெல்லாம் மீறி தமிழினத்தின்பால் அக்கறைகொண்டு சுதந்திரமிக்க நியாயமான தீர்வொன்றை சிங்கள பேரினவாதிகளிடமிருந்து எதிர்பார்த்தோமானால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவுமில்லை.
இவ்வாறான கீழ்த்தரமான நிலைமை ஈழத்தமிழினத்திற்கு வராமல் தடுக்க என்ன வழி?
ஈழத்தமிழர்கள் அகிம்சை வழியில் போராடி முடியாமல் போக, ஆயுதப் போராட்டமே ஒரே வழியென்று முடிவெடுத்து இற்றைக்கு முப்பது வருடங்களுக்கும் மேலாக போராடி ஒன்றரை இலட்சத்துக்கு மேலான மக்களையும், முப்பதினாயிரத்துக்கும் மேலான விடுதலைப் போராளிகளையும் இழந்தும் சர்வதேசத்தின் கரிசனை ஈழத்தமிழர்மீது முழுமையாக ஏற்படாத நிலையில், இவ்வளவு காலமாய் ஈழத் தமிழரை தலைநிமிர்ந்து நடக்க வைத்த ஆயுத்தப் போராட்டமும் முடிவடைந்து விட்டதான கருத்து எல்லாமட்டத்திலும் எழுந்து வருகின்றது.
ஆயுதப் போராட்டம் இனிமேலும் தொடரப்படுவதற்கும் இனி சாத்தியக் கூறுகள் இல்லை என்ற கருத்தும் எழுந்துள்ளது. இவற்றின் உண்மைத்தன்மைபற்றியும், இக்கருத்தினை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்களின் வாதப் பிரதிவாதங்களையும் தாண்டி இனிமேல் தமிழர்களின் போராட்டம் எந்த வழியில், யார் தலைமையில் தொடரப் போகின்றது?
அது எவ்வகையான போராட்டமாக அமையும் அல்லது அமையவேண்டும்?
தற்போதைய தோல்விகளின் பின் முன்னெடுக்கப்படும் போராட்டம் எந்தளவுக்கு வெற்றியளிக்கும் ?
தனி ஈழம் என்ற இலட்சியத்தினையும் நியாயமான தீர்வினையும் அதன்மூலம் அடைய முடியுமா? என பலவாறான கேள்விகள் வரிசையாகக் காத்திருக்கின்றன.
ஆனால், கேள்விகள், விவாதங்களைத் தவிர்த்து காலவோட்டத்தில் நமது இலட்சியப் பாதையில் தடைகளைக் கடந்து பயணிக்கவேண்டிய காலக்கட்டாயத்தில் நாம் நிற்கின்றோம். இங்கு கேள்விகளுக்கோ அல்லது விவாதங்களுக்கோ இடமளிக்கக் கூடாது. இதுவரைகாலமும் நமது தேசியத்தலைவரின் தலைமையில் புலிகள் நமக்காக போராடியிருந்தார்கள், இப்போது நாமே நமது உரிமைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் நிற்கின்றோம். காலத்தின் , சந்தர்ப்ப
சூழலின் தேவையறிந்து இப்படியான சூழ்நிலை உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் அர்த்தம் புலிகள் முற்றாக அழிந்து விட்டார்கள் என்பதல்ல. அவர்கள் போராட்டங்களிலிருந்து முற்றாக ஒதுங்கி விட்டார்கள் என்பதல்ல. அவர்களுக்குரிய இடைவேளையிது. இப்போது போராட்டம் தமிழ்மக்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் மீண்டும் வரவேண்டும் என கால நிர்ப்பந்தம் ஏற்பட்டால் நிச்சயம் மீண்டும் வருவார்கள். ஆனால் அதை தீர்மானிக்கப் போவது, உங்கள் கைகளிலும் சர்வதேசத்தின் கைகளிலும்தான் உள்ளது. எங்களது போராட்டம்தான் எங்கள் உறவுகளை சிறைக் கூண்டுகளிலிருந்து விடுவிக்கும், காப்பாற்றும். எங்கள் உரிமைகளை எங்களுக்குப் பெற்றுத்தரும்.புலிகள் தற்காலிகமாக ஒதுங்கிக் கொண்டதன்மூலம் தமிழருக்கான தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டிய பொறுப்பை சர்வதேசத்தின் தலையில் போட்டிருக்கின்றார்கள். சர்வதேசம் அதை விரும்பியோ விரும்பாமலோ செய்தேயாக வேண்டும் என்ற கட்டாயத்தினை ஏற்படுத்தியிருக்கின்றார்கள்.தொடரும் எங்கள் போராட்டங்கள் அதனை அவர்களுக்கு மேலும் வலியுறுத்தும்.
அதை நாம் செய்ய வேண்டியது நமது தலையாய கடமை. இன்றைக்கு உலக நாடுகள் கொஞ்சமேனும் ஈழமக்களுக்காக குரல்கொடுக்கின்றது என்றால் அது புலம்பெயர் தமிழ்மக்களின் போராட்டங்களினால்தான். இந்நிலையில் நமது ஒற்றுமையைத் தொலைத்துவிட்டு நமக்குள் நாமே கருத்துப்பிளவுபட்டுக் கொள்வதில் எந்த அர்த்தமுமில்லை... பிரயோசனமுமில்லை.
வெளிவரும் செய்திகளின் உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் காலம் தன் பாதையில் அனைத்தையும் வெளிப்படுத்தும் என்ற நம்பிக்கையில் நாம் நமது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும். அதிகாரபூர்வமற்ற அநாமதேய அறிக்கைகளைக் கண்டு மனமுடைந்து சோர்ந்து போகாமல் நமது தலைவனின் வரவுகாய் காத்திருப்போம்! அதுவரை விடியலின் வரவுக்காய் உழைத்திடுவோம்!

சர்வதேசத்தினை நோக்கி தமிழர்தரப்பு தொடங்கியிருக்கும் இராஜதந்திரப் போரினால் சிங்கள அரசு பலத்த அடிவாங்கப் போகின்றது என்பது நிச்சயம். ஆனால் இதனை வார்த்தைகளில் மட்டும் சொல்லிகொண்டிருக்காமல் நமது போராட்டங்கள் செயன்முறைகள் மூலம் அமுல்படுத்துவதன் மூலமே அடையமுடியும்.ஒற்றுமை என்பதை நமக்குள் உள்வாங்கி ஓரணியில் திரண்டு ஒருமித்த குரலில் நம் உறவுகளுக்காகவும்,நம் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுப்போமானால் வெற்றி என்றுமே நம் பக்கத்தில் மட்டுமே இருக்கும்.
இருக்கும் - இருக்காது, நடக்கும் - நடக்காது , இருக்கின்றார் - இல்லை என்ற தேவையில்லாத விவாதங்களை முற்றாகத் தவிர்த்துவிட்டு நமது வரலாற்றுக் கடமையை நாம் தவறாது செய்வோம்.காலம் எல்லாவற்றையும் நமக்கு வெளிப்படுத்தும். அதுவரை நம்மை முற்றுமுழுவதுமாக அர்ப்பணிப்போம் நம் தேசத்தின் விடிவுக்காக.
தமிழீழத் தேசியத் தலைவர் தொடர்பில் வெளிவரும் செய்திகளின் பின்னணியில் பல ராஜதந்திர நகர்வுகள் இருப்பதாகவே தென்படுகின்றது.அந்த நகர்வுகளின் நகர்வுகளை நமது போராட்டத்தினைப் பற்றி முழுமையாகப் புரிந்து வைத்திருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள். போர்வெற்றிகள் தீர்மானிக்க முடியாத தீர்வினை இராஜதந்திர வெற்றிகள் தீர்மானிக்கும்.கடந்த காலங்களில் விடப்பட்ட இராஜதந்திர இடைவெளிகளை இம்முறை தமிழர் தரப்பு சரிவர நிவர்த்திசெய்யும். இதன் ஆரம்பப் படிகளாக முன்னெடுக்கப்பட்டிருக்கும் ஒருசில விடயங்களினாலேயே சிங்கள அரசு பயங்கொள்ளத் தொடங்கிவிட்டது எனில், இந்த இராஜதந்திரப்போராட்டம் இன்னும் பல அதிசயங்களை தமிழர்களுக்காக செய்வதற்கு காத்திருக்கின்றது.இவ்வாறான இராஜதந்திரப் போருக்கு உலகம் பூராவுமுள்ள தமிழர்களின் ஆதரவு மிக மிக அவசியம். ஆதலால் நமக்குள் உள்ள கருத்துவேற்றுமைகளை மறந்து ஒன்றாய் களம் புகுவோம்.வென்று தலை நிமிர்வோம்!
இல்லையென்று சொல்லிகொண்டு சோர்ந்துபோய் விடுவதும்...
இருக்கின்றார் என்று சொல்லிக்கொண்டு வரும்வரைக்கும் காத்துக் கொண்டிருப்பதும்...
வாழுகின்ற நம் தலைவனை மீண்டும் வராமலே வைத்துவிடும்.

தலைவரின் வழிகாட்டல்கள் இப்போதைக்கு மறைமுகமாகவே நம்மை வந்து சேரும்.
எனவே உண்மையறிந்து,களமறிந்து,காலமறிந்து நாம் களம் புகுவோம்! இனிவரும் போர்... இராஜதந்திரப்போர்!
-பருத்தியன்-
தமிழரின் தாகம் தமிழ் ஈழத் தாயகம்