Saturday, July 18, 2009

எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும

ஆடு நீ... ஆடு நீ... ஓநாய் மாதிரி ஊளையிடாதே.... என்ற ஆட்டுக்குட்டிகளின் பாடலைக் கேட்க ஓநாய் அந்த ஏரியாவிலேயே இல்லை. அதன்பிறகு அதற்கு வாலும் இல்லை, வாலாட்டுவதுமில்லை. ஆளைப் பார்க்கவேண்டியது அவசியமில்லை, வாலைப் பார்த்தாலே போதும் என்பதை ஆடுகள் மட்டுமல்ல... அனைவருமே அறிந்துகொள்ளவேண்டும்.
உண்மைகளை வதந்திகள் என்றும் வதந்திகளை உண்மைகள் என்றும் நம்பவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாக யாராவது அழுது புலம்பினால், உடனேயே கண்ணீர்க் கூட்டணி அமைத்துவிடக்கூடாது. அழுபவர் கிளிசரின் போட்டிருக்கிறாரா என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். அதைவைத்து எது ஒரிஜினல், எது டூப்ளிகேட், எது வதந்தி, எது உண்மை என்பதையெல்லாம் விளங்கிக் கொள்ளமுடியும்.
கடந்த 60 ஆண்டுகளில் இப்போதுதான் என்றுமில்லாத அளவுக்கு பலவீனமாகி நிற்கிறோம்...
என்று மூக்கைச் சீந்துவது எதற்கு? நம்மை பலப்படுத்துவதற்கா, மனத்தளவில் பலவீனப்படுத்துவதற்கா? இவ்வளவு பாசத்தோடு நமக்கு பந்தி வைப்பவர்கள் பாயாசத்தை வைப்பார்கள் என்றா நினைக்கிறீர்கள்!
ராம் அண்ணன் அடுக்கெடுக்கிறார் என்பது கதை....மீண்டும் பாய்வார்கள் என்பது வதந்தி..... சாதித்துக் காட்டுவார்கள் என்பது கற்பனை... என்றெல்லாம் இப்போது எழுதியிருக்கும் இதே பேனா தான், 30 ஆண்டுகளாக பிரபாகரன் கட்டிவளர்த்த தமிழ் சாம்ராச்சியம் அவர் கண்களுக்கு முன்பே துகள்களாக உடைந்து நொறுங்கி மண்ணோடு மண்ணாகிவிட்டது என்று முன்பு எழுதியது. அதன்மூலம் தனது கண்ணீர் ஆனந்தக் கண்ணீர் என்பதை அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்தது. இத்தகைய பதிவால் தான், தாங்கள் யாரென்பதை அவர்கள் அடையாளம் காட்டுகிறார்கள்.

மிகக் கடுமையாக விமர்சித்து ராஜபட்சேவை கோபப்படுத்துவதால் பயனில்லை, அதனால் அப்பாவித் தமிழர்கள்தான் தேவையில்லாமல் பாதிக்கப்படுவார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து ஒரு குரல் எழுகிறது. உணர்ச்சிப் பெருக்கோடு எதையாவது செய்ய முனைவது சிங்கள வெறியர்களை உசுப்பேற்றி விடும், அது வன்னியில் ஆபத்தில் இருப்பவர்களை பேராபத்தில் தள்ளும் என்று வெளி உலகிலிருந்து ஒரு குரல் வருகிறது. இரண்டுமே சாதுர்யம் பேசுகின்றன.

இவர்களை மாதிரி ஆட்கள், தகுதியே இல்லாதவர்களிடம் போய் தட்டேந்தி விடக்கூடாது என்பதற்காகத் தான் 1987 செப்டம்பரிலேயே மிகவும் தெளிவான தமிழில் பிரகடனம் செய்தான், எங்கள் இனத்தை எழுப்பிநிறுத்திய வீரத்தியாகி திலீபன்.

இழந்த உரிமைகளை நாம் மீட்டெடுக்கவேண்டும். மற்றவர்களைக் கொண்டு அதை வெல்லலாம் என்று எதிர்பார்க்கவே கூடாது என்றான் அவன், தனது வரலாற்றுச் சிறப்புமிக்க உண்ணாவிரதத்தைத் தொடங்கும்போது. நாட்டுக்காகத் தன்னைத் தியாகம் செய்த திலீபனின் வார்த்தைகளை தங்களுக்காக நாட்டைத் தியாகம் செய்பவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதில் நியாயமில்லை.

திலீபன் பேசியது, செப்டம்பர் 14ம் தேதி.. அதற்கு 40 நாளுக்கு முன், ஆகஸ்ட் 4ம் தேதி சுதுமலையில் பேசினார் பிரபாகரன். அந்தப் பேச்சு ஒரு தேர்ச்சி பெற்ற அரசியல் தலைமையின் பேச்சுக்கு இணையானதாக இருந்தது. 1987 ஜூலை 29ல் ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.

அந்த ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இல்லை. அதை ஏற்கமறுக்கும் பிரபாகரனிடம், நீங்கள் இதை ஏற்காவிட்டாலும் பரவாயில்லை, எதிர்க்காதீர்கள் என்கிறது இந்தியா. பிராந்திய வல்லரசான இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க முன்வருகிறார் பிரபாகரன். மறுவாரம், சுதுமலை கூட்டத்தில் மக்களைச் சந்திக்கிறார். அந்தக் கூட்டத்தில் பிரபாகரன் பயன்படுத்திய வார்த்தைகள் வரலாற்றின் கவனத்தில் வைக்கப்படவேண்டியவை.
நாம் இந்த ஆயுதங்களை இந்தியாவிடம் ஒப்படைக்கும் கணத்திலிருந்து, எம் மக்களுக்கான பாதுகாப்புப் பொறுப்பையும் இந்தியாவிடம் ஒப்படைக்கிறோம் என்றார் பிரபாகரன். இதைவிட நறுக்குத் தெறித்தாற்போல் வேறெவர் பேசமுடியும்? இதுதான் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தல். இந்தியாவுக்கு மட்டும் எப்படி இது விளங்காதுபோயிற்று? அந்த மக்களை, ராஜீவின் ராணுவம் பாதுகாத்த லட்சணம் என்ன?

புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பிரச்சினையை ஏற்படுத்தவே, அவர்களை இங்கே வரவைத்து இவர்களுடன் மோதவிட்டேன் என்று வெளிப்படையாகவே சொன்னார் ஜெயவர்தன. ஸ்மார்ட் ஆக இல்லாததால் தான், ராஜீவ் தரப்புக்கு இது புரியாமல் போயிற்று. தொப்புளாவது கொடியாவது என்று தப்புதப்பாக இந்தியா முடிவெடுப்பது அப்போதிருந்துதான். இந்த இந்தியாவின் துணையுடனா ஸ்மார்ட் பவர் பேர்வழிகள் தேரை நகர்த்தப் போகிறார்கள்!
இவர்கள் தேரையும் நகர்த்தவேண்டாம், போரையும் நடத்தவேண்டாம். தாமதமில்லாமல் செய்யவேண்டிய வேலைகளில் ஈடுபட தாமாகவே முன்வரும் ஈடுஇணையற்ற சக்தியான இளைய தலைமுறையினரைக் குழப்பாமல் இருந்தால் அதுவே மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
வதை முகாம்களில் உள்ள மூன்று லட்சம் தமிழர்கள் என்ன செய்யப்படுவார்கள் என்பது கோதபாயவுக்கே தெரியாது. மகிந்த ராஜபட்சேவை என்ன செய்வதென்றே அவன் இன்னும் முடிவு செய்யவில்லை. இந்தநிலையில், 180 நாளில் மீள்குடியேற்றம் என்று ராஜபட்சே சொல்வதை, வடிகட்டிய அறிவாளியான இந்தியாவைத் தவிர வேறெவரும் நம்பப்போவதில்லை. 880 சதுர கிலோமீட்டர் கொண்ட யாழ்குடாவில், 160 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு உயர் பாதுகாப்பு வலயங்களில் சிக்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன.
இத்தனை ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தில் நடந்துவிடாத மீள்குடியேற்றம், 180 நாளில் வன்னியில் நடந்துவிடப் போகிறதா? அறிவுள்ளவர்கள் இப்படித்தான் யோசிப்பார்கள். ராஜபட்சேவுக்கு கருணை மனு எழுதிக்கொண்டிருக்கமாட்டார்கள். நடந்த இனப்படுகொலைக்கு சாட்சியங்களாகத் திகழ்ந்தவர்கள் மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, வரதராஜா, சண்முகராஜா போன்றோர். அவர்களைப் போன்றவர்கள் சர்வதேச சமூகத்தின் பாதுகாப்பில் இருந்தால்தான், உண்மைகள் வெளிவரும்.
அவர்கள் கோதபாயவின் பிடியில் இருந்தால், ஹிந்து பத்திரிகையின் மொழியில்தான் பேசவேண்டி இருக்கும். முல்லைத்தீவில் விமானத்திலிருந்து குண்டுவீசியது இலங்கை விமானப்படையினர் அல்ல, புலிகள்தான் விமானத்திலிருந்து குண்டுவீசினார்கள் என்றுகூட சொல்லவேண்டியிருக்கும்.
இது நம்முடைய கருத்து மட்டுமல்ல. சர்வதேச அமைப்பான அம்னஸ்டியும் இதைத்தான் சொல்கிறது. தங்களுடைய மக்களைக் கைவிட்டுவிடாமல் பங்கருக்கு உள்ளே இருந்துகூட மருத்துவம் பார்த்த அந்த மருத்துவர்கள் உள்ளேயும், ராஜபட்சே கும்பல் வெளியேயும் இருப்பது மனித இனத்துக்கே அவமானம். அந்த மருத்துவர்களை வெளியே கொண்டுவர உடனடி நடவடிக்கைகள் தேவை.

ஒரே ஆண்டில் ஒரு லட்சம் பேரையும் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கானோரையும் கொன்று குவித்து இனவெறியாட்டம் நடத்திய ராஜபட்சே சகோதரர்களையும் சிங்கள அதிகாரிகளையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் நடவடிக்கைகளை எடுப்பதற்கான சர்வதேச சூழல் உருவாகியிருக்கிறது. உலகெங்கிலுமுள்ள மனித உரிமை அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த தமிழ் மாணவர்களாலும் இளையோராலும் நிச்சயமாக முடியும்.
தங்களைக் காத்துக் கொள்ளவேண்டிய நிலைக்கு அந்த அரக்கர்கள் தள்ளப்படும்போதுதான், இலங்கையின் திமிர் அடங்கும். தமிழரின் குரல்வளையின் மீதான பிடி விலகும். இதன் முதல்படியாக, நடந்த இனப்படுகொலை தொடர்பான ஆவணப்படங்கள் போன்றவற்றை உலகெங்கிலுமுள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் திரையிடத் தேவையான முயற்சிகளை இளையோரும் மாணவர்களும் எடுக்கலாம். ராஜபட்சேயின் பொய்முகத்தை உலக அரங்கில் அம்பலப்படுத்துவதற்கான முதல்படி இது.
அடுத்த படி இதைவிட முக்கியமானது.

எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும் என்கிற யதார்த்தம் ராஜபட்சேக்களுக்கும் பொருந்தும். உண்மையில் எதைப் பெற ராஜபட்சேக்கள் தகுதியானவர்களோ அதை அவர்கள் பெற ஆவன செய்ய ஆரம்பித்தாலே போதும், ஆட்டம் அடங்க ஆரம்பித்துவிடும். தன்னுடைய சொந்தமக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டுவீசும் நாடு என்னுடைய இலங்கைதான். இதைச் சொல்வதற்காகத் தான் என்மீது தேசத் துரோகி என்று முத்திரை குத்தப்படுகிறது. இதைச் சொல்வதுதான் தேசத்துரோகம் என்றால் அந்த முத்திரையைப் பெருமையுடன் ஏற்கிறேன் என்று வெளிப்படையாகப் பேசியதற்காகவே கொல்லப்பட்டான் லசாந்த.

மகிந்தவின் நண்பனான லசாந்த விக்கிரமதுங்க கொல்லப்பட்டதில் மகிந்தவுக்குத் தொடர்பிருப்பதாக சர்வதேச பத்திரிகையாளர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டினர். லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும், தங்களைத் திசைதிருப்பப் பரப்பப்படும் வதந்திகளால் தடுமாறுகிறது தமிழ்ச் சமூகம்.

ஆம்புலன்ஸில் தப்பமுயற்சித்தபோது சுட்டோம், நந்திக் கடலில் உடல் கிடைத்தது, எரித்துவிட்டோம், கடலில் கரைத்துவிட்டோம், கோடாரியால் வெட்டினோம்........ என்பதெல்லாம் 100 வீதம் உடான்ஸ். எதற்கு இப்படிப் பொய்சொல்லவேண்டும்? இப்படியெல்லாம் புதிய புதிய வதந்திகளைக் கிளப்பி விட்டுக்கொண்டே இருந்தால் தான், அதி புத்திசாலிகளான நாம் அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். இருக்கிற ஆதாரங்களை ஆவணப்படுத்தி, ராஜபட்சேவைக் கூண்டில் ஏற்றும் வேலையை அடியோடு மறந்துவிடுவோம். இதைத்தான் எதிர்பார்த்தது இலங்கை. அதைத்தான் செய்கிறோம் நாம்.

எனவே, ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் இளையோர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் முழுமூச்சோடு இறங்கவேண்டும். கொலைவெறி அடங்காத ராஜபட்சேக்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டால்தான், அவர்களுக்கு சர்வதேச அரங்கில் தண்டனை நிச்சயம் என்கிற நிலையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஏற்படுத்தினால்தான், கொதிப்பது அடங்கும்.
அவர்களை ஆத்திரப்படுத்துவதைவிட அம்பலப்படுத்துவதுதான் இப்போதைக்கு முக்கியம். இப்படியொரு நிலையை உருவாக்க முயலும்போது இதற்கு என்னென்ன விதத்திலெல்லாம் முட்டுக்கட்டைகள் போடப்படும் என்று முதலிலேயே ஆலோசிப்பதும் அதை எப்படிச் சமாளிப்பதென்று முன்கூட்டியே தீர்மானிப்பதும் அவசியம்.

சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான சகல 'தகுதி'களும் ராஜபட்சேக்களுக்கு இருக்கிறது. அந்தக் கூண்டில் நிறுத்தப்பட்டால், தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அதனால்தான், அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் "இந்தியாவின் போரை நடத்தியவர்கள்".
குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தியபிறகு செய்யவேண்டிய வேலைகளை இப்போதே பட்டியலிட முடியும். ஆனால், இப்போதைக்கு நாம் தாமதமின்றிச் செய்யவேண்டியது, குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தத் தேவையான வேலைகளைத்தான். குற்றவாளிக் கூண்டில் ராஜபட்சேக்களை ஏற்ற, சர்வதேச சமூகத்தை அணுகுவதற்குமுன், உலகெங்கும் சிதறிக்கிடக்கிற தமிழ்ச் சமூகத்தை அணுகுவது அவசியம்.

அந்தப் பணியையும் கூட தமிழ் மாணவர்களே முன்னெடுப்பது நல்லது. ஐரோப்பிய நாடுகளிலும், பிரிட்டன், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த மாணவர்கள் உடனடியாகக் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட நாளில் உலகெங்கும் மனிதச் சங்கிலி அமைப்பதென்று தீர்மானிக்கலாம். (போராட்டத்தின் வடிவம் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். அது ஜனநாயக முறைப்படி கலந்துபேசி எடுக்கப்படவேண்டிய முடிவு.)

போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சேக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகெங்கும் ஆதரவு திரட்டும் தூதுக்குழு ஒன்றையும் அவர்கள் அமைக்கவேண்டும். அந்தத் தூதுக்குழுவில், மாணவர்களும் மாணவிகளும் சம எண்ணிக்கையில் இடம்பெறவேண்டும். அந்தத் தூதுக்குழு தனது பணியைத் தமிழகத்திலிருந்தே தொடங்கலாம்.
தமிழகத்துக்கு வருகிற மாணவர்கள் தூதுக்குழு, முதலில் முதல்வர் கலைஞரையும்,அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசலாம். ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இரவு-பகல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் ஒரே நாளில்-ஒரே சமயத்தில் உலகமெங்கும் மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானித்திருப்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லலாம்.

அதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டுவதன்மூலம், அவர்களது ஆதரவை நிச்சயமாகப் பெறமுடியும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, அவரை ஏன் பார்க்கவேண்டும், இவரை ஏன் பார்க்கவேண்டும், அவர் வந்துவிடுவாரா, இவர் வந்துவிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளை அலட்சியப்படுத்தி அனைவரையும் சந்திப்பது மிக மிக முக்கியம். அந்த மனிதச் சங்கிலிக்கு தாய்த் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் உறுதி செய்தபிறகு, உலகெங்கும் பயணம் செய்து அந்தத் தூதுக்குழு ஆதரவு திரட்டலாம்.

செல்லும் இடமெல்லாம் அவர்களை வரவேற்க ஊரே கூடியிருக்கும். உலகெங்கிலும் மட்டுமல்ல, சென்னையிலும் அவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு கிடைக்கும். அன்றைய தினம் சென்னையில் அந்தத் தூதுக்குழுவை வரவேற்க, தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரளுவார்கள் என்று இப்போதே சொல்கிறேன்.... எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. பழைய ஆசாமிகள் காகிதப் புலிகளாகவும் காமெடி எலிகளாகவும் மாறிவிட்டபிறகு, உலக வீதிகளில் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்கிற பதாதைகளுடன் துணிவுடன் வலம் வந்தவர்கள் இந்த இளைய புலிகள்தான்.
ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற தமிழ் மாணவர்களின் கோரிக்கையுடன் இரவென்றும் பகலென்றும் பாராமல் உலகம் முழுக்க ஒரே சமயத்தில் கோடானுகோடித் தமிழர்கள் கை கோத்து நிற்பது உலகின் மனசாட்சியை உலுக்கும், ராஜபட்சேவின் அலரி மாளிகையைக் குலுக்கும், ராஜபட்சேக்களுக்கும் குற்றவாளிக் கூண்டுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்கும். அதற்குப் பிறகு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களாலோ அக்பர் ரோடு அக்காக்களாலோ கூட மகிந்த ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாது.

இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதச் சங்கிலியை அமைக்க உலகெங்கிலும் இருக்கும் எங்கள் தமிழ் இளையோராலும் மாணவர்களாலும் நிச்சயமாக முடியும். ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கைகோத்து நிற்கவைப்பதற்கான தகுதியும் உறுதியும் இந்தப் பொடியன்களுக்கு இருக்கிறது. தங்களுக்காக தாயகக் களத்தில் உயிர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களை மனத்தில் சுமந்துகொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறைக்கு, இப்படியொரு வரலாற்றைப் படைக்கவேண்டிய கடமயும் இருக்கிறது.

சர்வதேச அரங்கில், போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான், இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில், எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றி, எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும்.
ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம் முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிலை ராஜபட்சேவுக்கு ஏற்படும். ஆக, எரிவதைப் பிடுங்கினால் தான் கொதிப்பது அடங்கும்.

ராஜபட்சேவை ஆத்திரப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அர்த்தமற்றது என்பதை, அப்படிச் சொல்பவர்களுக்கு முதலில் எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம்தான். அதே சமயம், நம்மீதான அக்கறையில்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கையையும் பற்றியபடிதான் மனிதச் சங்கிலி அமைக்க முடியும்.
இதையெல்லாம் எடுத்துரைக்க எழுத்தைப் பயன்படுத்தாமல், இறக்காதவர்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழ் எழுதி புழுதி கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் இனியாவது உருப்படியான வேலைகளில் இறங்குவார்களாக! எவருக்கும் துதி பாடுவது எனது நோக்கமல்ல என்று சொல்லிக்கொண்டே துதி பாடுவது சுமந்த வயிற்றுக்கும் அழகல்ல, சுமக்கும் மண்ணுக்கும் அழகல்ல.

மனிதாபிமான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை உலகுக்கே எடுத்துக் காட்டியுள்ளோம் என்று ராஜபட்சே குறுக்குசால் ஓட்ட முயல்வது, இலக்கை விட்டுவிட்டு உலக்கை போட்டுக்கொண்டிருக்கும் சிலரது அறியாமையால் தான்.

எனவே, துளியும் தாமதமின்றி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். நச்சு எலிகள் தப்பிக்கவே முடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிப்போம். அதற்காக, மனிதச் சங்கிலியோ,, அதைவிட மகத்தான பணியோ... எதுவாயிருந்தாலும் அவற்றில் அளவுகடந்த ஈடுபாடு காட்டுவோம். நமது எழுச்சி, எதிர் நிலையில் இருப்போரைக்கூட நம்முடன் இணைந்துகொள்ளச் செய்யும்.
பெரியகுளத்துக் கவிஞன் மு.மேத்தா சொன்னதைப் போல்,
நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த மலர்கள்கூட ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்!
கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டுஇ உறுதியோடும் நம்பிக்கையோடும் ஓர் உண்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொருவரும் முன்வருவோம்.

வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை
நம் சொந்தங்களை ரத்தம் சிந்தவைத்த
நச்சுப் பாம்புகளை நையப்புடைப்போம்....
ரத்தம் குடித்த ராஜபட்சிகளை
சர்வதேச கூண்டில் ஏற்றுவோம்....
இறக்கை என்பது இயற்கையின் எல்லை,
இயலாதென்று முயலாதவர்கள்
இறக்கை இருந்தும் பறப்பது இல்லை.
முத்துக்குமாரின் நினைவோடு
ஒட்டுமொத்த உலகத்தையும்
திரும்பிப் பார்க்கவைத்த
எங்கள் இளையோரின் அகராதியில்
இயலாது என்ற வார்த்தையே இருக்க இயலாது.
அந்தப் பொடியன்களின் தலைமையில்
உலகத் தமிழினத்தைக் கைகோக்க வைப்போம்....
களங்கத்தைத் துடைப்போம்... வரலாறு படைப்போம்!
ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றுவதுதான், கம்பிவேலிகளுக்குப் பின்னால் கண்ணீருடன் நிற்கும் எங்கள் சொந்தங்களுக்கு விடுதலை வாங்கித் தரும். ராஜபட்சேக்கள் உள்ளே போகிறவரை, எங்கள் சொந்தங்கள் வெளியே வரமுடியாது என்பதை மனத்தில் நிறுத்தி,இன்றே இப்போதே களத்தில் இறங்குவோம்.
தமிழ்க்கதிருக்காக,
காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்
- புகழேந்தி தங்கராஜ்

Monday, July 13, 2009

கறுப்பு யூலை



மிகக் கொடூரம் வாய்ந்ததும் சோகம் நிறைந்ததுமான கறுப்பு யூலை இனக் கலவரங்கள் நடந்து 21 ஆண்டுகள் ஆகின்ற இந்த வேளையிலும்ää அந்த தமிழினப் படுகொலைகளின் வேதனைகளும் வடுக்களும் எந்த ஒரு தமிழனின் இதயத்தை விட்டும் விலகாமல் இருக்கும்.
1983ம் ஆண்டு யூலை மாதம், இலங்கைத்தீவில் நடைபெற்ற இனக்கலவரம் என்கின்ற படுகொலைகள்ää சிறிலங்கா அரசின் அநாகரிக கலாச்சாரத்தின் கேவலமான கீழ் நிலையை உலகத்திற்கு எடுத்துக் காட்டின. இந்தத் தமிழிப் படுகொலைகள்ää திடீரென ஓர் ஆவேசத்தல் நடாத்தப்பட்டதல்ல. ஒரு பௌத்த சிங்களப் பேரினவாத அரசால் திட்டமிடப்பட்டு, முறையாகச் செயல்படுத்தப்பட்ட இனப் படுகொலைகள் தான் யூலை 83 தமிழினப் படுகொலைகள்.
அந்த வாரம் ஆயிரக்கணக்கில் அப்பாவித்தமிழ் மக்கள் ஈவு இரக்கமின்றி வெட்டிக் கொல்லப்பட்டனர் - தீயிட்டு கொழுத்தப்பட்டனர். கோடிக்கணக்கில் தமிழர்களின் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டன. அது மட்டுமல்லää சிறைச்சாலைக்குள்ளும் கோரக்கொலைகள் நடாத்தப்பட்டன. தங்கத்துரை. குட்டிமணி உட்பட 53 தமிழ்; இளைஞர்களை குண்டர்கள் குத்திக் குதறிக் கொன்றார்கள். ஒரு பயங்கரவாத அரசாங்கத்தின் சகல சக்திகளும் ஒருமுகப்பட்டுää தமிழ் இனத்தின் மீது கோரத்தாண்டவம் ஆடின.
1983ம் ஆண்டு யூலை மாத இனக்கலவரங்கள்ää தமிழ் மக்களுக்குப் புதிதான ஒன்றல்ல. 1956-1958-1974-1977 என்று அதற்கு முன்னரும் மாறி மாறி வந்த சிங்கள அரசுகளால் பல தடவைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழினப் படுகொலைகளின் உச்சக்கட்ட வெளிப்பாடுதான் 83 கறுப்புயூலை. நாசத்தையும் அழிவையும் தமிழீழ மக்களுக்குத் தந்த இந்த யூலை 83 இனப்படுகொலைகள் இன்னொரு விதத்தில் சிலருக்கு நன்மைகளையும் தந்தது என்பதும் உண்மைதான்! ஆம், இலங்கைத்தீவில் தமிழருக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தால் புலம்பெயர்ந்த மக்களுக்கு அமைதியான வாழ்க்கையை அமைத்திடுவதற்கு வெளிநாடுகள் அனுதாபத்துடன் அனுமதி அளித்ததற்கும் இரத்தம் தோய்ந்த யூலை 83 காரணமாக அமைந்தது. 21 ஆண்டுகளுக்கு முன்பு நாகரீக உலகில் அதிர்ச்சி கொள்ளக்கூடிய வகையில் நடைபெற்ற இனப்படுகொலைகள் பின்னர் ஓய்ந்தனவா என்று கேட்டால்ää அதற்குரிய பதில் கசப்பானதாகத்தான் இருக்கும்.ஆமாம்! யூலை 83 ஒரு தூசுக்கு சமன் என்கின்ற விதத்தில் பின்னரும் தமிழர்கள் நளாந்தம் படுகொலை செய்யப்பட்டதும்ää கைது செய்யப்பட்டதும்ää கைது செய்து காணாமல் போனதும்ää தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்பட்டதும்ää செம்மணி போன்ற மனிதப் புதைகுழிகளில் போய் தெரியாமல் உறங்கிப் போனதும் தொடர்ந்தும் நடைபெற்றன.யூலை 83ல் இலங்கையின் பல இடங்களில் இருந்தும் தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட போதுää தன் தனயர்களைக் கைநீட்டி வரவேற்றுக் கட்டித் தழுவியது யாழ்குடாநாடு. ஆனால் அதே யாழ் குடாநாடு இரவோடு இரவாக ஒரே நாளில் தனது மைந்தர்கள் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அரச பயங்காரவாதம் காரணமாக அகதிகளாக அல்லல்பட்டு இடம்பெயர்ந்ததையும் பின்னாளில் கண்டு கதறியது.
வாழையடி வாழையாக வாழ்ந்தவர்கள்ää வந்தரையும் வாழ வைத்தவர்கள்ää சொந்த நாட்டிலேயே சுகம் இழந்துää சுற்றம் இழந்து சோகத்தில் மரநிழலில் - வீதியோரத்தில் - காடுகளில் வாழவேண்டிய காலமும் வந்தது. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில்ää தினமும் செத்துப் பிழைத்த அந்த ஜீவன்களுக்கு யூலை 83 ஒரு தூசு அல்லவா?ஆமாம் அன்பர்களே! யூலை 83 மீண்டும் தொடர்ந்தது - வித்தியாசமான விதத்தில் - வேற்று வடிவங்களில் தினம் தினம் ஈழத்தமிழர்களை அழிப்பதற்கு யூலை 83 தொடர்ந்தும் செயற்பட்டது. ஆனால் அதற்கு வேறு பெயர்கள் இடப்பட்டன.
சிறிலங்கா அரசின் இராணுவ நடவடிக்கைகள்ää அவற்றின் உண்மையான பெயர் யூலை 83 உணவுத்தடை - அதன் மறுபெயர் யூலை 83! மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தடை - அதன் சரியான பெயர் யூலை 83! மனித உரிமை மீறல்கள்- அதன் ஆரம்பப் பெயர் யூலை 83! காணாமல் போனோரின் கதை - அதன் உட்பெயர் யூலை 83! கிருஷாந்தி போன்றோரின் கண்ணீர் கதறல்கள் - அதே கறுப்பு யூலை 83!அன்பர்களே! 83 யூலை மாதம் மட்டும்தான் ஞாபகம் இருக்கின்றதா? 83ல் இருந்து ஒவ்வொரு நாளும் ஈழத்தில் நடந்த அக்கிரமங்கள் அட்டூழியங்கள் அநியாயங்கள் யாவும் மறந்து போகுமா என்ன?யூலை 83... என்று நினைத்துக் கலங்கிவிட்டுச் சும்மா இருக்கும் நேரமல்ல இது. உரிமையிழந்து பின்னர் உடமையிழந்து, இப்போது உயிர் கொடுத்துப் இப்பவும் போராடுகின்ற எமது இனத்தின் உணர்வுகளுக்கு நம் தோள் கொடுக்க வேண்டிய நேரமிது. சொல்லொண்ணாக் கஷ்டங்களை அனுபவித்த எமது மக்கள் இன்று தமது அடிப்படை வேட்கைகளாக தாயகம் - தேசியம் -சுயநிர்ணய உரிமை என்பனவற்றை வெளிப்படுத்தி அவற்றை அரசியல் ரீதியாக சமாதானப் பேச்சு வார்த்தைகள் ஊடாகப் பெற்றிடலாம் என்ற நம்பிக்கையில் எமது இனம் காத்து நிற்கின்றது.
அவர்களது அடிப்படை வேட்கைகள் நிறைவேறுவதற்கு நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம்.! அவர்களது இலட்சியத்தை அடைவதற்கு தோள் கொடுப்போம். மறவர் கைகளைப் பலப்படுத்துவோம். நாளைப் பொழுது தமிழர் வாழ்வில் நல்லபடியாக மலரும் என்ற நம்பிக்கை வரவேண்டுமென்றால் அதற்கு நாமும் நமது கடமையைச் செய்திட வேண்டுமல்லவா?

எம் மக்கள் உணர்ச்சிஎன் உண்மை வெளிப்பாடு


மெனிக்பாம் அகதி முகாமில் மகிந்த மூத்தமகன் மீது மக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்கள்




வவுனியா ஏதிலிகள் முகாமுக்கு பயணம் செய்த மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நாமல் ராஜபக்ச மீது பொதுமக்கள் சேறடிப்பு மற்றும் கல்வீச்சுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
நேற்று சனிக்கிழமை வவுனியா மெனிக்பாம் ஏதிலிகள் முகாமுக்குச் ஊடகவியலாளர்களுடன் சென்ற நாமல் ராஜபக்ச மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இளையோர்களின் செயற்திட்டம் குறித்த விடயங்களை முன்னெடுப்பதற்காகவே அங்கு சென்றிருந்தார்.
தாக்குதல்கள் சம்பவங்களை அங்கு சென்ற ஊடகவியலாளர்கள் ஒளிப்பதிவு மற்றும் புகைப்படங்களை எடுத்திருந்த போதும் அவற்றை நாமல் ராஜபக்ச பறித்து அளித்துள்ளார். இதனால் பல ஊடங்களில் தாக்குதல்கள் தொடர்பான பதிவுகள் வெளிவரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.