Monday, August 3, 2009


புதைக்கப்பட்ட இலவசக்கல்வியும் விதைக்கப்படாத சமச்சீர்கல்வியும்.


ஒரு பொற்காலம் இருந்தது தமிழ்நாட்டில்.


பஞ்சை பராரிகளின் பரட்டைத் தலையை தடவிக் கொடுத்து பள்ளிக்குப் போகச் சொன்ன காலம் அது. கூழுக்கு உழன்ற ஏழைகளின் வாழ்வுக்கு உதவிய காலம் அது. கல்வியை முழுமையாக அரசே கையிலெடுத்துக்கொண்ட காலம் அது.

கையிலெடுத்துக்கொண்ட கல்வி சிந்தாமல் சிதறாமல் ஏழைக்குழந்தைகளின் வாழ்வைச் சென்றடைந்த காலம் அது.இன்றைய கல்வித்துறையில் ஏன் இத்தனை அவலம்? எத்தனை வகைப் பள்ளிகள்! நமது பள்ளிப்பிள்ளைகளில் எத்தனை வகை ஏற்றத்தாழ்வுகள்! எப்போது தோன்றின இந்தப்பிளவுகள்? ஏன் விளைந்தன இத்தனை வேறுபாடுகள்? காரணம் யார்? மக்களா? அரசா? ஆசிரியர்களா?

பள்ளிப்பருவத்திலேயே இத்தனை வேறுபாடுகளை விதைக்கிறோமே!... எதிர்காலத்தில் வேறுபாடற்ற சமுதாயம் எப்படி விளையும்? கேள்விகள் மட்டுமே இங்கே விளைகின்றன. விடைகளை விளைவிக்க யாரும் இல்லை.

தமிழ்நாட்டில் தற்போது இருந்துவரும் நான்கு வகையான பள்ளிகளையும், பாடத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து சமச்சீர் கல்விமுர்ரையைக்கொண்டுவரும் நோக்கத்தில் அரசாங்கம் ஒரு குழுவை அமைத்தது. குழுவும் ஆய்வறிக்கையை அரசுக்கு கொடுத்துவிட்டது. இந்த நான்குவகைப்பள்ளிகளில் மிக அதிகமான எண்ணிக்கையில் வளர்ச்சி பெற்றுக்கொண்டிருக்கும் மெட்ரிக் பள்ளிகளை கட்டுப்படுத்துவது எளிதான காரியமில்லை என்பது கல்வித்துறையை நன்கு அறிந்தவர்களுக்கு அன்றும் தெரியும்; இன்றும் தெரியும். “பிரச்சினையை ஆறப் போட வேண்டுமென்றால், அதை ஒரு கமிட்டியிடம் தூக்கிப்போடு” என்பது நிர்வாகத்தின் பாலபாடமென்பதும் தெரியும்.

இருந்தாலும், நல்லது ஏதாவது நடக்காதா, என்ற ஆசையோடு இருப்பவர்களுக்கு சமச்சீர்கல்வி பற்றி அரசு வாய்திறக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது. இன்று நடப்பதென்ன? அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. விளைவாக பள்ளிகள் எண்ணிக்கையும் குறையும்தானே? மாறாக, மெட்ரிக்பள்ளிகளின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது.

கல்வி அதிகாரிகள் ஒவ்வொருமாதமும் தலைமை ஆசிரியர்களின் கூட்டங்களை நடத்துவது வழக்கம். ஒரு காலத்தில், “மெட்ரிக் பள்ளி தலைமை ஆசிரியர்” என்ற இனமே அந்தக் கூட்டங்களில் இல்லாமல் இருந்தது. காலப்போக்கில் கடைசி இருக்கைகளில் ஓரிரு மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூச்சத்துடன் நெளிந்துகொண்டு உட்கார்ந்திருந்தனர். அதன்பிறகு “சாம்பலிலும் தமிழ்மணந்து வேகவேண்டும்” என்று ஆசைப்பட்டவர்களின் ஆட்சி வந்தது. இப்போதெல்லாம் மேலே சொன்ன தலைமை ஆசிரியர் கூட்டங்களில் மெட்ரிக்பள்ளி தலைமை ஆசிரியர்களின் ஆதிக்கம் அதிகமாகி, அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் நெளிந்துகொண்டு உட்கார்ந்திருக்கும் காலம் வந்துவிட்டது.

மெட்ரிக் பள்ளிகள் தனியாரின் சொத்துக்கள். அதாவது வருவாய் ஈட்டித்தரும் சொத்துக்கள். மெட்ரிக்பள்ளிகளின் நிர்வாகிகள் இப்போதே கோரிக்கை எழுப்பத் தொடங்கிவிட்டனர். பல இனங்களிலும் வரிக்குறைப்புகோரி குரலெழுப்பத்தொடங்கிவிட்டனர். வரிக்குறைப்பின் மூலம் மாணவர்களின் கல்விக்கட்டணம் குறையுமா என்ன?

அரசுப்பள்ளிகளில் அனுபவம்மிக்க ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அருமையான கல்விமுறை இருக்கிறது. மாணவர்களை ஆளுமை மிக்கவர்களாக மாற்றும் திறனுடைய ஆசிரியர்கள் இருக்கிறார்கள். குறைபாடு உடைய இடங்களும் இருக்கின்றன. ஆக்கபூர்வமான கண்டிப்பு அந்தக்குறைபாடுகளை நிச்சயமாக நீக்கிவிடும்..கல்வித்துறையின் குளறுபடிகளால் சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்துவதற்கான சூழல் சிக்கலாகிக்கொண்டுவருகிறது. தற்போது செயல்வழிக்கற்றல் என்ற கற்பித்தல் முறை அரசுப்பள்ளிகளில் கையாளப்பட்டுவருகிறது. இதே முறையை மெட்ரிக்பள்ளிகள் நடைமுறைப்படுத்தாமல் இருப்பதில் இருந்தே, அரசின் கையாலாகாத நிலை வெளிப்படுகிறது. ஏற்கனவே பாடத்திட்டத்தில் இருக்கும் வேறுபாடுகளை இதுபோன்ற புதிய திட்டங்கள் அதிகப்படுத்துமே அன்றி, குறைக்கப் போவதில்லை. எனவே சமச்சீர் கல்வி என்ற தத்துவம் சொல்லிக் கொள்ளாமலேயே விடைபெற்றுக் கொண்டுவிட்டது என்பது நிச்சயமாகத்தெரிகிறது.

அரசுப்பள்ளிகளில் சிறப்புக்கட்டணம் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் மெட்ரிபள்ளிகளிலும், தனியார் பள்ளிகளிலும் பல்லாயிரக்கணக்கணக்கான ரூபாய்கள் முறையான ரசீது இல்லாமல் நன்கொடை என்கிற பெயரில் வாங்கப்படுவதை எப்படி இந்த அரசு அனுமதிக்கிறது? இந்தப் பள்ளிகளில் தங்களுடைய குழந்தைகளை சேர்ப்பதற்கான விண்ணப்பத்தை வாங்குவதற்கு முந்தைய நாள் நள்ளிரவில் வரிசையில் ஏன் நிற்கவேண்டும்?

கல்வித்துறையின் இன்றைய செயல்பாடுகள் சாதாரணமக்களுக்கு திருப்தியளிப்பதாக இல்லை.

இன்றை நிலையில் தமிழ்நாட்டில் பணம் உள்ளவர்கள் “எதுவும்” படிக்கலாம். பணமில்லாத ஏழைகள் “ஏதோ” படிக்கலாம் என்பதே உண்மை.

ம.கோ.ராசா(கௌதம்ராஜா)