Friday, September 11, 2009

சிறீலங்காவின் தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐ.நா பொதுச் செயலர் செய்துகொண்ட உடன்படிக்கை - பான் கீ மூனின் கோரமுகம் அம்பலம்


சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட தமிழ் இனப்படுகொலையை மறைக்க ஐக்கிய நாடுகள் (ஐ.நா) பொதுச் செயலர் மகிந்த அரசுடன் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொண்டிருந்த மிகப்பெரும் உண்மையன்று அம்பலத்திற்கு வந்துள்ளது என இன்று வெள்ளிக்கிழமை வெளிவந்த "ஈழமுரசு" இதழ் தெரிவித்திருக்கின்றது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி இதழே இந்த உண்மையை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே மாதம் போர் முடிந்த மறுநாள் (ஐ.நா.) சபையின் பொதுச் செயலாளர் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஒரு கூட்டு உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.
தமிழ் மக்களின் அழிவினைக் கூடப் பொருட்படுத்தாமல், தான் சர்வதேச ரீதியில் புகழ் பெறுவதற்காக ஒரு திட்டத்தை வகுத்திருந்த பான் கீ மூன் இந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார். அதாவது, பாதிக்கப்பட்ட தமிழர்களை அரசியல் ஆறுதலை வழங்குவதன் மூலமும், கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை விடுவிப்பதன் மூலமும் இந்த புகழை அடைவதற்கு சிறீலங்காவின் இனப்படுகொலையை மூடி மறைக்கும் பெரும் திட்டத்தை வகுத்துள்ளார்.
அந்தத் திட்டத்தின் பிரகாரம் வன்னி மக்களை விடுவித்தால், அதற்கு பிரதி உபகாரமாக சிறீலங்கா மீது சுமத்தப்படும் போர்க் குற்றங்கள் சர்வதேச விசாரணைக்கு கொண்டுவரும் பட்சத்தில், ஐக்கிய நாடுகள் சபை அந்த விசாரணைக்கான ஆதரவினை வழங்காது எனவும், அத்துடன், சர்வதேச விசாரணைகள் இன்றி, போர்க் குற்றங்களை புரிந்த சிறீலங்கா இராணுவத்தினர் மீது சிறீலங்கா அரசாங்கமே விசாரணைகளை நடத்துவதா இல்லையா என்பதை முடிவு செய்யும் எனவும் தான் அறிவிப்பதாக அந்த உடன்படிக்கையை செய்துகொண்டுள்ளார்.
இந்த உடன்படிக்கை கொடுத்த துணிவிலேயே ஐ.நாவின் உயர் அதிகாரிகளும், மனித உரிமைவாதிகளும் உருவாக்க முனைந்த போர்க் குற்ற விசாரணைகளை சிறீலங்காவின் இராஜதந்திரிகளும், அரச உயர்மட்டத் தலைவர்களும் திமிருடன் அவற்றை உதாசீனம் செய்து புறக்கணிக்கும் துணிவைப் பெற்றிருந்தார்கள்.
இந்த அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம், உலகின் போர்க் குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டு வருவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் தவறிவிட்டார் என அமெரிக்காவில் வெளிவரும் வாஷிங்டன் போஸ்ட் இதழ் தனது செய்தியில் குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, மகிந்த ராஜபக்சவுடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றுவதற்காக ஐ.நா. உயரதிகாரிகளையும் மனித உரிமை அதிகாரிகளையும் இலங்கையில் கொல்லப்படும் தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிட வேண்டாம் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
அதற்காக அவை நம்பகத்தன்மை அற்றவை என்ற நொண்டிச்சாட்டையும் பான் கீ மூன் உருவாக்கினார் என அவருடன் நெருங்கிப் பணிபுரிந்து ஐ.நா. அதிகாரிகளே இப்போது குற்றச்சாட்டை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால், இத்தனையையும் மறைத்து இவரால் மகிந்த ராஜபக்சவிடம் இருந்து போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த முடியவில்லை எனவும், இருநாள் போர் இடைவேளையையே அவரால் பெற முடிந்தது எனவும் கூறியுள்ள அவர்கள், இந்தப் படுகொலைகளை மறைத்ததன் மூலம் 20 ஆயிரம் தமிழர்களை அழிக்கும் அளவிற்கு மகிந்த ராஜபக்சவிற்கு இவர் துணைபோயுள்ளார் எனவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதேவேளை, சிறீலங்கா இனப்படுகொலையை நடத்திக் கொண்டிருந்தபோது, விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றார்கள் என்றொரு குற்றச்சாட்டினை சர்வதேச ரீதியில் பலமாக முன்வைத்து சிறீலங்காவின் இனப்படுகொலையை நியாயப்படுத்தியதுடன், ஊக்கிவித்தும் உள்ளார் என குற்றச்சாட்டுக்கள் தற்போது அவரைச் சூழ உள்ளவர்களாலேயே எழுப்பப்பட்டு வருவதுடன், அவரது ஆளுமை பற்றிய சந்தேகங்களையும் எழுப்பி வருகின்றனர்.
பான் கீ மூனின் இந்தச் செயற்பாடுகளானது, ஐ.நா. இராஜதந்திரிகள் இடையே இவரின் இரண்டாவது பகுதி சேவைக்காலம் எதையும் சாதிக்க இயலாத பிரயோசனமற்ற சேவைக்காலமாகவே கருதுகின்றனர்.
இதுஇவ்வாறிருக்க, அதிகாரமற்ற மற்றும் நேர்மையற்ற தனத்தின் மூலம் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் படுகொலைக்கு சாட்சியாக இருந்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்தை போர்க் குற்றவாளியாக்க தவறியதன் மூலமும் ஐ.நாவின் கட்டமைப்பையும் ஐ.நாவின் கொள்கைகளையும் பான் கீ மூன் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என நோர்வேக்கான ஐக்கிய நாடுகள் வதிவிடப் பிரதிநிதி மோனா யூல் பகிரங்கமாக கண்டித்துள்ளார்.
நன்றி சங்கதி

No comments: