Sunday, April 4, 2010

பிரிட்டனில் கடை போட்ட தமிழ் வள்ளல்கள்


- மூன்றாம் பகுதி)

வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர்.

சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் மூலம் ஈடுகட்டுகின்றது. வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் வெள்ளையர்கள் பயன்படுத்தும் சலுகையை, தமிழர்கள் பலர் அனுபவிப்பதில்லை. அதற்கான காரணங்களாவன: அரசின் சமூகக் கொடுப்பனவுகளைப் பெற்று தம்மை வசதியற்றவர்களாக காட்டிக் கொள்ள பலர் வெட்கப்படுவது. பாரம்பரிய நிலப்பிரபுத்துவ கலாச்சாரத்தின் படி, கஷ்டம் வரும் நேரம் உறவினர், நம்பர்களின் உதவியில் தங்கியிருத்தல். அரசாங்கத்தின் சமூக நலன்புரி திட்டங்கள் குறித்த அறிவின்மை என்பதாகும்.

அதே நேரம், புதிதாக லண்டன் வருபவர்கள், வதிவிட அனுமதிப் பத்திரத்திற்காகவோ, அன்றேல் அகதி அந்தஸ்து பெறுவதற்கோ நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படுகிறது. காத்திருக்கும் காலத்தில் கிடைக்கும் தற்காலிக தொழில் அனுமதிப் பத்திரத்தை எடுத்தவுடன் (தற்போது அதை நிறுத்தி விட்டார்கள்) வேலை தேடக் கிளம்பி விடுவார்கள். லண்டன் நகரில் தெரிந்த உறவினர், நண்பர் வீட்டில் தங்கி இருந்து கொண்டு எங்காவது வேலை செய்கின்றனர். அவருக்கு இடம் கொடுக்கும் வீட்டுக்கடன் கட்டுபவர்களும், வாடகை கட்டுவோரும் தமது செலவை பங்கிட்டுக் கொள்கின்றனர்.

சிலநேரம் வேலை செய்யும் இடம் வெகு தூரத்தில் இருக்கலாம். அப்படியான தருணத்தில் வேலை செய்யும் இடத்திற்கு அருகாமையில் வதிவிடம் இருப்பது அவசியம். (அதி விரைவு சுரங்க ரயில் பயணமே சில நேரம் இரண்டு மணித்தியாலம் எடுக்கும்.) ஹோட்டல், ரெஸ்டாரன்ட் வேலைக்கு தமிழ் தொழிலாளர்களை எடுத்துக் கொடுக்கும் முகவர்கள், தாமே வதிவிடத்தை ஒழுங்கு பண்ணிக் கொடுக்கின்றனர். அப்படியான "தொழிலாளர் விடுதி" ஒன்றை காண நேர்ந்தது. ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் வேலை செய்யும் தமிழ் தொழிலாளர்கள் அனைவரும் அந்த வீட்டில் தங்கி இருந்தனர். நான்கு படுக்கை அறைகளை கொண்ட வீட்டில் 10 பேர் தங்கியிருக்கின்றனர்.

அங்கு வசிப்பவர்கள் குறிப்பிட்ட வீட்டை "அகதி முகாம்" என்று பட்டப் பெயரால் அழைக்கின்றனர். அவர்களை ஹோட்டலுக்கு வேலைக்கு அனுப்பும் முகவருக்கு சொந்தமானது அந்த வீடு. வீட்டில் வசிக்கும் தொழிலாளிகளுக்கு கொடுக்கும் சொற்ப சம்பளப் பணத்திலேயே வாடகையை கழித்துக் கொள்கிறார். வீட்டை அடமானம் வைத்து வாங்கியிருந்த அந்த முகவர், கூடிய சீக்கிரமே வீட்டுக் கடனை அடைத்து விடும் நம்பிக்கையில் இருக்கிறார். அதற்கு காரணம், அங்கே தங்கி இருக்கும் ஒவ்வொருவரிடமும் 200 பவுன்கள் வாடகை அறவிடுகிறார். இன்னொருவனின் உழைப்பில் ஒரு வீட்டை சொந்தமாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் யாருக்கு வரும்?

புதிதாக பிரிட்டன் வரும் பலருக்கு வேலை வழங்கும் இன்னொரு துறை, தமிழர் கடைகள். புலம்பெயர் மண்ணில் தமிழ் கலாச்சாரத்தை காப்பற்றும் திருப்பணியை சிரமேற்கொண்டு, இந்திய,இலங்கை இறக்குமதிப் பொருட்களுடன் பல கடைகள் காணப்படுகின்றன. லண்டன் வாழ் தமிழ் சமூகத்திற்கு சேவை செய்வதற்கு தேவையான மனித உழைப்பையும் அந்த சமூகத்தில் இருந்தே பெற்றுக் கொள்கின்றனர். ஒரு கடையில் ஐந்து பேர் வேலை செய்தால், ஒருவரை மட்டும் சட்டப்படி பதிந்து வைத்திருப்பார்கள். (வேலைக்கு எடுக்கும் ஒவ்வொரு நபருக்கும் அரசுக்கு வரி கட்ட வேண்டும்.) முன்னர் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பினார்கள். (அப்போது தானே விரும்பிய படி சுரண்டலாம்.) தற்போது போலிஸ் கெடுபிடி காரணமாக, மாணவர்களை வேலைக்கு அமர்த்துகிறார்கள். அவர்களுக்கும் சட்டப்படி வாரம் 20 மணித்தியாலங்களே வேலை செய்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மேலதிகமாக வாரம் 30 மணித்தியாலங்களாவது சட்டவிரோதமாக வேலை செய்கின்றனர்.

லண்டன் மாநகரத்தின் சில பகுதிகள் குட்டி சென்னை, குட்டி யாழ்ப்பாணம், என்று குறிப்பிடுமளவிற்கு தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். இதனால் தமிழ்க் கடைகளுக்கிடயிலான போட்டி காரணமாக அடிக்கடி மலிவு விற்பனை அறிவிப்புகள் காணப்படும். மலிவு விற்பனையில் குறைக்கப்படும் விலையானது, சட்டவிரோதமாக சுரண்டப்பட்ட கடைச் சிப்பந்திகளின் உழைப்பு என்பதால் வியாபாரிகளுக்கும் கவலையில்லை. இதைவிட மேலதிக விற்பனை வரியில் குளறுபடி செய்வது மட்டுமல்ல, பிற வரி ஏய்ப்புகளுக்கு கணக்கு போட்டுக் கொடுப்பதற்கு தமிழ் கணக்காளர்கள் இருக்கிறார்கள். தமிழ்க் கடைகளுக்கு கணக்கு சரி பார்க்கும் அக்கவுண்டட் ஒருவர் "பணக்கார ஏரியா" எனக் கருதப்படும் லண்டன் வட்டாரமொன்றில் வசிக்கிறார். இவர் தனது சொந்த வீட்டை மட்டுமல்லாது, சின்ன வீட்டு செலவுகளையும் சிறப்பாகவே பராமரித்து வந்துள்ளார். எனக்குத் தெரிந்த வரை, தனது வைப்பாட்டிக்கு மாத்திரம் மாதம் 2000 பவுன் செலவிடும் அளவிற்கு சுரண்டலில் பங்கெடுத்துள்ளார்.

பிரிட்டனில் தமிழ் முதலாளிகள் தமிழ்க் கடைகள் மட்டுமல்ல, "ஆங்கிலக் கடைகளையும்" நடத்தி வருகின்றனர். பெரும் முதலாளித்துவ நிறுவனங்கள் மேலும் மேலும் வளர்ந்து வரும் ஒரு நாட்டில், தனியொரு நபர் நடத்தும் சிறு கடைகள் நிலைத்து நிற்க முடிவதில்லை. சிறு வணிக முயற்சிகளை ஆதரிக்கும் அக்கறையும் அரசுக்கு இல்லை. அதிலும் குறிப்பாக நகரங்களில் உழைக்கும் வர்க்க மக்கள் வாழும் பகுதிகளில் எந்தவொரு வர்த்தக முயற்சியும் வீண் விரயமாகும். அப்படியான இடங்களில் நஷ்டத்தில் நடக்கும் கடைகளை, தமிழர்கள் வாங்குகின்றனர். அவற்றில் 4 பவுன் கூலிக்கு தமிழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டு வியாபாரம் செய்கின்றனர். அது தான் வெள்ளையின கடை முதலாளிகளுக்கு "தெரியாத வியாபார சூட்சுமம்".

பிரிட்டனில் ஒரு "பெட்டிக்கடை" வைத்திருப்பவர்கள், தம்மை ஒரு பெரிய கம்பனியை நிர்வகிக்கும் தொழில் அதிபர் போல பாவனை செய்து கொள்கின்றனர். வெள்ளையின மேலாதிக்கம் நிலவும் பிரிட்டிஷ் தொழிலகங்களில் வேலை செய்வதை விட, சுய மரியாதையுடன் சொந்தமாக வியாபாரம் செய்வதாக ஒரு கடை முதலாளி தெரிவித்தார். அப்படியானவர்கள் தம்மிடம் வேலை செய்யும் தொழிலாளரின் சுய மரியாதை பற்றி சிந்திப்பதில்லை. எடுபிடிகளாக நடத்துவதற்கு வசதியாக, இளம்பராய மாணவர்களை பணியில் அமர்த்துகின்றனர். 4 பவுன் கொடுத்து தினசரி வேலை வாங்குவதால் வெறுத்துப் போன கடைச் சிப்பந்திகள், சில்லறைத் திருட்டுகளையும் கண்டு கொள்வதில்லை. வர்க்க ஒற்றுமையில் இருந்து வெளிப்படும் உணர்வு அது. "எனது முதலாளி திருடுவதை விட அதிகமாக இந்த அற்பர்கள் எடுத்துச் செல்லப் போவதில்லை." என்று நியாயம் கற்பித்தார் எனது நண்பர் ஒருவர்.

உழைக்கும் வர்க்க குடியிருப்புகளில் வாழும் வெள்ளையின சிறுவர்கள், வறுமை காரணமாக சிறு திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஒரு பவுனும் பெறுமதியில்லாத சாக்லேட், சிப்ஸ் பக்கட் போன்றவற்றை தான் தூக்கிச் செல்கின்றனர். பாடசாலை விடும் நேரம் கூட்டமாக நுழையும் சிறுவர்களே சில்லறைத் திருட்டுகளில் ஈடுபடுகின்றனர். சில கடை உரிமையாளர்கள் திருட்டு முயற்சிகளை தடுப்பதில் வரம்பு மீறுகின்றனர். (சாக்லேட் திருடிய வெள்ளையின சிறுவனை நிலத்தில் தள்ளி வீழ்த்தி அடிக்கப் போனதாக ஒரு கடை உரிமையாளர் தெரிவித்தார்.) இது சில நேரம் இனங்களுக்கிடையிலான பகை உணர்ச்சியை கிளறி விடுகிறது. மேலும் வேலையற்ற வெள்ளையின மக்கள் மத்தியில், தெற்காசிய சமூகத்தை சேர்ந்தவர்களின் செல்வச் செழிப்பு பொறாமைத் தீயை மூட்டுகின்றது. இப்படியான சந்தர்ப்பங்களில், BNP போன்ற பிரிட்டிஷ் இனவாதக் கட்சிகள் வெள்ளையின உழைக்கும் வர்க்க குடியிருப்புகளில் வாக்கு வேட்டையாடுகின்றன.

No comments: