Sunday, June 28, 2009

சின்னாபின்னமாகும் பெண்ணுரிமை!

ஆடைக்கட்டுபாடுகள் திணிக்கப்படும்போதெல்லாம் தமிழகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்ணுரிமைப்பற்றி பேச ஆரம்பித்துவிடுவார்கள் பெண்கள். நாளேடுகளும் ஏதோ தங்களால் முடிந்த பெண்ணுரிமை கருத்துக்கள் என்று பெண்ணுரிமைக்கு போனஸாக மேலோட்டமாக பெண்ணியவாதிகள் கவிஞர்கள் கருத்துக்களை மேற்கோள் வைத்து எழுத்து வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள். அதை வைத்து ஒரு கூட்டம் காரசாரமாக விவாதத்தை தொடங்கும். நாலு பிரபலங்களிடம் பெண்ணுரிமைக் கேள்விகள் கேட்கப்படும். அதை வைத்து இன்னுங் கொஞ்ச நாள் பெண்ணுரிமை ஓடும். அப்பறமென்ன சிலநாட்களில் பெண்ணுரிமைகள் காணாமல் போய்விடும்.

ஆடைக்கட்டுப்பாடுகள் குறித்த பிரச்சனைகள் தமிழகத்தில் வரும்போதெல்லாம் தமிழகத்தில் இருக்கும் பெண்ணியவாதிகள் சில நாட்கள் எழுத்துப் போர் புரிவார்கள். ஏதோ அடக்குமுறை திணிப்பு உரிமைகள் ஒடுக்கப்படுகிறது விடமாட்டோம் என்று குதிப்பார்கள். அதுவும் வந்த வழி தெரியாமல் போய்விடும்.

சமூகத்தில் தினம் தினம் ஏதோ ஒர்வகையில் பிரச்சனைகள் பெண்களுக்கு இருந்துக் கொண்டே தான் இருக்கிறது. இருப்பினும் அவை சகிப்புத்தன்மையாக மாறிவிடுகிறது. ஆனால் ஒட்டு மொத்த பெண்களும் உடைக்கட்டுபாடு என்று வரும்போது மட்டும் பெண்ணுரிமை ஞாபகத்திற்கு வந்துவிடும்.

இது ஆணாதிக்க உலகம். இந்த ஆண்கள் பெண்களை அடக்கி ஒடுக்கி வைப்பதிலேயே குறியாய் இருக்கிறார்கள். அதனால் தான் எங்களால் ஒன்றையும் சாதிக்க முடியவில்லை என்று பெண்கள் குமுறுவார்கள். இது பெண்ணுரிமை கேட்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதே பல்லவிதான் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் ஆணாதிக்கம் என்ற ஒரே பார்வையோடு விமர்சித்துக் கொண்டிருப்பதை விட்டு வேறு கோணத்தில் சிந்திக்க தோன்றுவதால் இந்த ஆணாதிக்கத்தை கொஞ்சம் ஓரங்கட்டி வைப்போம்.

பெண்களுக்குள்ளேயே ஆடைகளை தேர்ந்தெடுப்பதில் பல குழப்பங்கள் இருக்கிறது. புடவைகள் சுடிதார் பேண்ட் சர்ட் உடைகள் குறித்து பெண்களுக்குள் இருக்கும் விமர்சனங்களையும் ஒதுக்கி வைப்போம். குறிப்பாக கணவன் வருமானத்தில் ஜீவிக்கும் பெண்கள் நிலையை விட்டுவிடுவோம். அவர்களுக்கு ஏதோ வீட்டு வேலை பார்த்தோமா, சீரியல் பார்த்தோமா, கணவன் வருடத்திற்கு இரண்டு புடவையை எடுத்துக் கொடுத்தானா தின்னமா, தூங்கினோமா, அடுத்த வீட்டுக்காரியை பற்றி இன்னொருத்தியுடன் குறை சொல்லி காலத்தை ஓட்டினோமா என்று வாழ்ந்துவிட்டு போகும் ரகம்.

இன்னொரு பெண்கள் கூட்டம் இருக்கிறது. இலக்கியப் பெண் படைப்பாளிகள். இந்த அறிவு ஜீவிகளுக்குள்ளேயே பெண்ணிலைப்பாடுகள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் இருக்கிறது. பழைய பஞ்சாங்கம் ஒருவகை என்றால் இன்னொன்று பெண்ணிய கட்டுடைப்புகளை எப்படி கட்டுடைப்பது என்பதில் சொதப்பும் வகை. கவிதையாலே பெண்ணியபுரட்சி நடத்திக் கொண்டிருப்பார்கள். உதவாக்கரைகள் ஒன்று சேர்ந்து மாதர் சங்கம் நடத்துவதைப் போன்றது. இந்தக் கூட்டத்தால் இளைஞிகள் பெண்ணுரிமையை தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து இருக்கிறது.

சென்ற வருடம் கனடாவில் நடந்ததே ஒரு கூத்து.

தமிழ்பெண்கள் அமைப்பு நடத்திய பெண்ணுரிமை கூட்டம். உள்ளாடைப் புரட்சியில் பெண்ணுரிமை இருக்கிறதாம். ஜட்டி, பாடி எல்லாவற்றையும் தொங்கவிட்டு கூட்டம் போட்டார்கள். இந்த அமைப்புக்கு கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்நாட்டு இலக்கிய பெண்ணியவாதி ஒருவர் சொல்கிறார்: "பெண்ணுரிமை யோனி (பெண்குறி) கட்டுடைப்பில் இருக்கிறதாம்." இந்த பெண்ணியக்கூத்து இப்படியென்றால்....

இன்னொரு கூத்து இருக்கிறது.

அனேக திரைப்படங்களில் வரும் வசனம் தான். உதாரணத்திற்கு ´இளைய தளபதி என்னும் பொறம்போக்கு´ குடுத்த ஆக்ட்டுக்கு துட்டை சம்பாதித்துக் கொண்டு போவோம் என்றில்லாமல் பெண்களுக்கு பெண்ணுரிமையைப் பற்றி அடிக்கடி பாடமெடுக்கும் ரகம். (தமிழ் திரைப்படங்களில் எல்லா நடிகர்களும் பெண்ணுரிமைக் குறித்து பாடமெடுத்தாலும் இந்த பொறம்போக்குக்கு இளைஞிகள் அதிக விசிறிகளாக இருப்பதால் சுட்டிக்காட்ட முற்படுகிறோம்.)

ஆண்மொழியில் ஓர் பெண்ணிய விமர்சனம்!

பெண்களுக்கு முன் வைக்கப்படுகிறது. அதை பெண்ணிலைவாதிகள் எப்படி எதிர்கொண்டார்கள்?

பையன் ஏதோ நல்லவனாட்டம் இருக்கான். ரொம்ப பெண்ணுரிமையெல்லாம் அழகாக ஸ்டைலாக எடுத்துவிடுகிறான் என்று மெச்சிக் கொள்வார்களா?

பெரியார் சொல்வார் :

நம் தமிழ் நாட்டிற்கும், தமிழ் மக்களுக்கும் மாபெருங்கேடாய் இருந்துவரும் மற்றொரு காரியம் சினிமா, நாடகம் முதலிய நடிப்புக் காட்சிகளாகும். இவை இசையைவிட கேடானவையாகும் என்பது என் கருத்து. நம் தமிழ்நாடு மானமுள்ள நாடாக, மானத்தில் கவலையுள்ள மக்களைக் கொண்ட நாடாக இருந்திருக்குமானால் இந்த நாடகம், சினிமா முதலியவை ஒழிந்து கல்லறைகளுக்குப் போயிருக்கும். இதை நான் வெகு காலமாகச் சொல்லி வருகிறேன். இசையினால் காது மூலம் உடலுக்கு விஷம் பாய்கிறது. நடிப்பினால் காது, கண் ஆகிய இரு கருவிகள் மூலம் உடலுக்குள் விஷம் பரவி இரத்தத்தில் கலந்து போகிறது. இவ்வளவு பெரிய குறைபாடும், இழிவும் உள்ள நாட்டுக்கும், மக்களுக்கும் இன்று கடவுள் பஜனையும், கடவுள் திருவிளையாடல் நடிப்பும்தானா விமோசனத்துக்கு வழியாய் இருக்க வேண்டும்?

நாடகம் எதற்கு? அது படிப்பிக்கும் படிப்பினை என்ன? அதற்காக ஏற்படும் செலவுகள் எவ்வளவு? புராணக் கதைகளை நடிப்பதினால் அனுபவிப்பதால் மூட நம்பிக்கை, ஒழுக்க ஈனம், கட்டுத்திட்டமற்ற காம உணர்ச்சி, கண்ட மாத்திரத்தில் காம நீர் சுரக்கும்படியாகப் பெண் மக்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளுதல் முதலியன பிடிபடுவதல்லாமல் வேறு என்ன ஏற்படுகிறது.

பெரியார்.
(தமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு என்ற புத்தகத்தில் இருந்து. பக்கம் : 66)

இந்த சினிமாக்காரர்களால் சமூகத்தை குட்டிச்சுவராக ஆக்குவதைத் தவீர வேறு என்ன செய்திருக்கிறது? இப்படிப்பட்ட துறையைச் சார்ந்த ஒருவன் பொது மக்களில் ஒருபால் இனத்தினரை கேவலப்படுத்தி பேசினால் பொறுத்துக் கொண்டிருப்பதா? ஆனால் இதையெல்லாம் பெண்கள் பொறுத்துக் கொள்கிறார்களே!

குஷ்புக்கு துடைப்பக்கட்டையையும் செருப்பையும் தூக்கிக் கொண்டு போன பெண்கள் இளைய தளபதிக்கு தூக்கிக் கொண்டு போனால் அடுத்த படத்தில் அந்த பொடியன் பேசுவானா? "பொம்பளைக்கு அட்வைஸ் பண்ணிட்டு தோளும் தோளும் தான் உரசறா மேலும் கீழும்தான் இழுக்கிறா?"ன்னு டுயட் பாடுவானா?

நம் பெண்களிடம் எங்கேயோ கோளாறு இருக்கிறது. சகிப்புத்தன்மை மிகுந்து போயிருக்க வேண்டும். அல்லது இதுபோன்ற அட்வைஸ்சுக்களையும் திட்டுக்களையும் கேட்டு கேட்டு பழகிப் போய்விட்டதால் எவனோ ஒரு பொறம்போக்கு சொல்லும் போது இவன் என்னத்தை புதுசா சொல்லிட்டான்னு பெருந்தன்மையாக விட்டு கொடுத்துவிடுகிறார்களா என்பது நமக்கு புரியவில்லை.

இப்படி எல்லாத்துறைகளிலும் பெண்கள் அசிங்கப்பட்டு கொண்டிருக்கும் போது குறிப்பாக இளம் பெண்கள் (இவர்களில் அனோகர் பொறம்போக்குக்கு விசிறிகள் வேறு) அலட்சியமாக பார்த்து இரசித்துக் கொண்டிருந்துவிட்டு ஆடை கட்டுப்பாடுகள் என்று ஏதாவது பிரச்சனை வந்தால் போதும். பெண்ணுரிமை பெண்ணுரிமை என்பார்கள்?

எது பெண்ணுரிமை? மேக்கப் ஜாமான்களிலும், மாடல் உடையிலும் தான் இவர்கள் பெண்ணுரிமை பேசுகிறார்கள். இந்த அறியாமை எப்படி வந்தது இவர்களுக்கு..

எத்தனை பெண்களுக்கு பெண்ணுரிமை என்றால் தெரிகிறது?

சமீபத்தில் மரணமடைந்த கமலா தாஸ் என்ற பெண்ணிய இலக்கியவாதியைப்பற்றி சக ஆண் இலக்கியவாதியான எழுத்தாளர்
ஜெமோகன் சொல்கிறார்

“கமலாவின் பிரச்சனைகளின் ஊற்றுக்கண் ஒன்றுதான். அவர் அழகி அல்ல. கறுப்பான குண்டான கிட்டத்தட்ட அவலட்சணமான பெண். அழகிகளின் குடும்பத்தில் பிறக்கவும் நேரிட்டது. இந்தத் தாழ்வுணர்ச்சியில் இருந்து உருவான திரிபுபட்ட ஆளுமை அவருடையது.”

எவ்வளவு வக்கீரம் பிடித்த விமர்சனம். எத்தனை பெண்கள் எதிர்த்தார்கள்? பிரபலான பெண்ணிய எழுதாளரின் மரணத்தில் இப்படியொரு அடையாளத்துடன் பெண்ணிய எழுத்துக்கள் விமர்சிக்கப்படும் போக்கு ஐரோப்பாவில் நடந்திருந்திருந்தால் பெண்ணியவாதிகள் ஒரு பிடிபிடித்து மானநஷ்ட வழக்கு போட்டிருந்திருப்பார்கள்.

மானமாவது மசுறாவது அதெல்லாம் எங்களுக்கு கிடையாது என்றால் எப்போதாவது வரும் உடைக்கட்டுப்பாடு பிரச்சனையில் மட்டும் பெண்ணுரிமை பற்றி பேசிவிட்டு போக வேண்டியது தான். அதிலாவது உருப்படியான செயல்பாடுகளை பெண்ணிலைவாதிகளால் எடுக்க முடிகிறதா? சும்மா புலம்புவதிலும் கவிதை எழுதுவதிலும் உரிமை பேசிவிட்டு போய்விடுவார்கள். எத்தனை பேர் செயலில் இறங்கி கடைசி வரை போராடி வெல்கிறார்கள்?

ஆறுகோடி தமிழர்களிடையே 3-கோடி தமிழ்பெண்கள் இருந்தால் கூட தமிழகத்தில் இதுவரையில் உருப்படியான பெண்ணிய சிந்தனைகளை செயல்படுத்திய பெண்கள் எத்தனை பேர் இருப்பார்கள்?

எப்போதும் பெண்ணுரிமைகளில் தெளிவான நிலைப்பாடுகளோ உறுதியான போராட்டங்களோடு போராடி பெண்களுக்கு தேவையான உரிமைகளை பெண்களே வென்றெடுக்காமல் அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கும் வரையில் பெண்ணுரிமையின் சித்தாந்தம் போலித் தன்மையில் இயங்கிக் கொண்டு பெண்களாலேயே சின்னாபின்னமாக்கிக் கொண்டிருக்கும்.

நன்றி தமிழச்சி

No comments: