Monday, June 29, 2009

சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிப்போம்

என்று மில்லாதவாறு, பெரும் தொகை நிதியை ஒதுக்கி, பிராந்திய வல்லரசினதும், உலக வல்லரசினதும் ஆதரவுடன், ஆசீர்வாதத்துடன், இன அழிப்புப் போரை மிகவும் தீவிரமாக, வெறித்தனத்துடன் மேற்கொண்டுவருகின்றது ராஜபக்ச அரசு.
மிகவும் நெருக்கடியான, அதி முக்கியமான காலகட்டத்தில், நாளாந்தம், ஐம்பது, நுாறு பேர் என, எங்கள் மக்கள், சிங்கள இனவெறி அரசின் குண்டு வீச்சுக்களாலும், எறிகணை வீச்சுக்களாலும், சிதைத்துச் சின்னாபின்னமாக்கப்படுகின்றனர். பச்சிளம் பாலகர்கள், குழந்தைகள், பெண்கள், முதியோர் என அனைவரும் பால் வயது வேறுபாடின்றி, கால்வேறு கைவேறாய், தலைவேறு முண்டம் வேறாய், பிய்த்து எறியப்படும் கொடுமை வன்னி மண்ணில் அரங்கேறுகிறது.

சாவின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர் எங்களது மக்கள். இந்தக் கொடுமையைத் தட்டிக் கேட்டு தடுத்து நிறுத்துவார் யாரும் இலர். எமது துணைக்கு யாரும் இலர். எம்மை ஆதரிப்போர் யாரும் இலர். எமக்காகக் குரல் கொடுப்போரும் யாரும் இலர். ஆனால், எமது மக்களுக்காக நாம் இருக்கின்றோம் அல்லவா. நாம் இருக்கின்றோம் என்றால், ஊர்வலம் போகின்றோம், கோசங்கள் எழுப்புகின்றோம், நினைவு வணக்கக் கூட்டங்கள் நடத்துகின்றோம், ஆர்ப்பாட்டம் செய்கின்றோம் அல்லது எமது மக்களுக்கான தேவைகளைப் பூர்த்திசெய்ய பங்களிப்புச் செய்கின்றோம்.இத்துடன் முடிந்ததா..? நாம் இருக்கின்றோம் என்ற ஆதரவுப் பாத்திரத்தின் பணி.

உண்மையில், புலம்பெயர்ந்து வாழும் மக்களிடத்தே போராட்டத்திற்கான பெரும் பணி காத்துக்கிடக்கிறது என்ற உண்மையை நாம் புரிந்து வைத்திருக்கின்றோமா? சிறீலங்கா அரசு மீதான, பொருளாதாரத் தடையை உலக நாடுகள் ஏற்படுத்தாதா என்று அங்கலாய்க்கின்றோம். சிறீலங்காவிற்கான ஏற்றுமதி வரிச் சலுகையை நீடிக்க வேண்டாம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் அழுது மன்றாடுகின்றோம். சிறீலங்கா மீதான தண்டனைத் தடைகளைப் போடுங்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கோரிக்கை விடுக்கின்றோம். ஆனால் நாம்? நாம் எம் விடயத்தில் செயலற்று சோம்பிக் கிடக்கின்றோம்.

சிறீலங்கா அரசை பணியவைப்பதற்கான மிகப்பெரிய துருப்புச் சீட்டு எம்மிடம் இருக்கின்றது என்பது, எமக்கான பலம். அதனை நாம் கையிலெடுப்பதன் மூலம், சிறீலங்கா அரசைப் பணியவைக்கமுடியும். அதிசயிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்த முடியும். சிங்கள இனவெறியர்களின் கொலைப் பிடியில் இருந்து எமது மக்களைக் காப்பாற்ற முடியும்.சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டமே அது!

ஏற்றுமதி வர்த்தகத்தில், எழுபது வீதமான பகுதியை, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலேயே சிறீலங்கா பூர்த்திசெய்கின்றது. தமிழர்கள் அதிகமாக வசிக்கும் நாடுகளே, அதன் பணவேட்டைக்கான காடுகள். வர்த்தகச் செயற்பாடுகள், விமானச் சேவைகள், வங்கிச் சேவைகள் ஊடாக, சிறீலங்கா பெற்றுவரும் அந்நியநாட்டுப் பணமே, சிறீலங்காவின், குண்டு வீச்சு விமானங்களாகவும், பல்குழல் எறிகணை செலுத்திகளாகவும், பீரங்கிகளாகவும், யுத்தக் கப்பல்களாகவும், தமிழர்களை கொத்துக் கொத்தாய் அழிக்கும் கொத்துக் குண்டுகளாகவும், குண்டுகளாகவும், தோட்டாக்களாகவும், நாசகார ஆயுதங்களாகவும் சென்றடைகின்றன.

எமது உறவுகள், எமது குழந்தைகள், துண்டங்களாய் சிதைக்கும் கொடும் கரங்களில், அழிவாயுதங்களைக் கொடுப்பவர்களாக நாம் இருக்கின்றோம் என்ற உண்மையை நாம் உணர்கின்றோமா? தெரிந்தோ தெரியாமலோ, புரிந்தோ புரியாமலோ நாம் செய்யும் இந்த மோசமான காரியத்தை, இன்றே கைவிடவேண்டும். தனி மனிதர்களாக, தனித்துத் தனித்து... தயங்கித் தயங்கிச் சிந்தித்து, ஒன்றும் உருப்படியாக நடக்கப்போவதில்லை. ஏற்கெனவே இதுபோன்ற ஒரு கருத்துநிலை 2006ம் ஆண்டளவில் உருவானபோதும், அது செயலுருப் பெறவில்லை. தற்போது அவசரமாகச் தேவைப்படுவது கூட்டுச் செயற்பாடு.

இதில் வர்த்தக சமூகம், நுகர்வோர் சமூகம், ஊடக சமூகம் என்பன முழுமையான ஒத்த கருத்துடன் இணைந்து, எமது இனவிடுதலைக்கான போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய, தாக்கமான இந்தப் போர் வடிவத்தைக் கையிலெடுக்கவேண்டும். இதனை, நாம், பிரான்சில் தமிழர்களின் வணிக மையமாகக் கருதப்படும் லாச்சப்பலில் இருந்தே ஆரம்பிக்கலாம். தமிழ் மக்களின் விடுதலை வரலாறு எழுதப்படும் போது, லாச்சப்பலில் ஆரம்பித்து, உலகமெல்லாம் பற்றிப் படர்ந்த புறக்கணிப்புப் போராட்டம் என்ற குறிப்பு பதியப்படட்டும்.

இங்கே, இனவுணர்வுள்ள வர்த்தக சமூகம், வர்த்தக சங்கம் வாய்க்கப்பெற்றிருக்கின்றது. அண்மைக்காலமாக தமிழ் வர்த்தக சங்கத்தின் செயற்பாடுகள், போற்றுதற்குரியவை. பிரான்ஸ் வர்த்தக சமூகத்தின் தன்னெழுச்சியான செயற்பாடுகள், ஏனைய நாடுகளுக்கும் முன்னுதாரணமாய் அமைந்துள்ளன என்பதை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். மக்கள் கொதி நிலையில் இருக்கின்றார்கள். இன அழிப்பில் இருந்து எம்மக்களைக் காப்பாற்றுவது எப்படி என்ற அங்கலாய்ப்பில் இருக்கின்றார்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாய், இளம் தலைமுறை, எழுச்சிகொண்டு நிற்கிறது.புலத்து மண்ணில் பிறந்து வளர்ந்த இளம் சந்ததி, தன் இனத்தின் பாரத்தை, தனது தோள்களில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்திருக்கின்றது. விட்டேந்தி விடலைகளாக, வம்பு பண்ணாமல், தியாகங்களைப் புரியத் தலைப்படுகின்றது. அர்ப்பணிப்பு மனோ நிலையுடன், ஒரு சந்ததித் தொடராய், போராட்டத்தை பாதுகாத்து முன்னே நகர்த்த முனைப்புடன் முன்நிற்கின்றனர். ஒழுக்கமும், நற்பண்புகளும், பொறுப்புணர்வும் மிக்க பிள்ளைகளைப் பெற்ற மனோநிலை, புலம் பெயர்ந்த தமிழ் சமூகத்திற்கு.இவ்வளவும் போதும், நாம் வரலாறு படைக்க. எமது தாயக விடுதலைப் போராட்டம் வெற்றிபெறும். எமது விடுதலை இயக்கம், எமது மக்களுக்கான சுதந்திர வாழ்வை மீட்கும்.

உலகமெலாம் பரவிவாழும், தமிழர்கள், தமக்கான ஒரு நாட்டை அமைத்தே தீருவர். அதற்காக நாம் இன்றே கடமையில் இறங்குவோம்.வர்த்தக சங்கம், ஒரு ஒன்றிணைந்த அமைப்பாக இருப்பதால், எல்லா வர்த்தகர்களையும், இறக்குமதியாளர்களையும் ஒன்றாய் இணைத்து, சிறீலங்காப் பொருட்களை இறக்குமதி செய்வதில்லை, சிறீலங்காப் பொருட்களை விற்பதில்லை என்ற பொது முடிவை எடுக்கவேண்டும். இதற்கு மாற்று வியாபார முறைமைகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.இதற்கு ஒரு மாத கால இடைவெளி கொடுத்து, சிறீலங்காப் பொருட்களை இறக்குவதையும், விற்பதையும் முற்றாக நிறுத்தவேண்டும். இந்தப் பொது முடிவுக்கு மாறாகச் செயற்படும், இறக்குமதியாளர்கள், வர்த்தகர்கள் புறக்கணிக்கப்படவேண்டும்.(இதி
ல் தனிமனித பாதிப்புக்களைக் கருத்தில் எடுக்க முடியாது. இனத்தின் நலனே தற்போதைய நெருக்கடியான நிலையில் கருத்தில் எடுக்கப்படவேண்டியுள்ளது.)

இங்கு நுகர்வோர் சங்கம் இல்லாத காரணத்தால், பொதுமக்களிடம் விழிப்புணர்வை எற்படுத்த வேண்டியது, இளம் தலைமுறையின் கடமை. லாச்சப்பலில், பொழுது போக்கிற்காகக் கூடும், இளைஞர்கள் கூட, இந்தப் பணியை தன்னெழுச்சியாக மேற்கொள்ளமுடியும். எமது இந்தப் புறக்கணிப்புப் போராட்டம் வன்முறையற்ற, சுய ஒறுப்புப் போராட்டம். இதில் எந்தச் சட்ட மீறலுக்கும் இடமில்லை.

முப்பதுகளில், இந்திய தேசபிதா மகாத்மாகாந்தி பிரித்தானியர்களுக்கு எதிராக, துணிவகை உட்பட, இறக்குமதிப் போருட்களைக் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினார். கை றாட்டை கொண்டு, கதர் துணி தயாரித்தார். ஐம்பத்தைந்தில், அமெரிக்காவில், மாட்டின் லுாதர் கிங் தலைமையில் கறுப்பின மக்கள் அரச பஸ் போக்குவரத்துச் சேவையைப் புறக்கணித்தனர். கால்நடையாகவே பயணங்களை மேற்கொண்டனர். தென்னாபிரிக்க நிறவெறி அரசுக்கு எதிராக, உலக நாடுகள், அந்நாட்டை புறக்கணித்தன (வர்த்தகம், விளையாட்டு உட்பட)ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை காரணம் காட்டி, மொஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியை, எண்பதாம் ஆண்டு அமெரிக்கா புறக்கணித்தது. எண்பத்தி நான்கில் லொஸ் ஏஞ்சலில் நடத்த ஒலிம்பிக் போட்டியை பதிலுக்கு சோவியத் யூனியன் புறக்கணித்தது. இஸ்ரவேலின் பலஸ்தீனத்துக்க எதிரான போரை எதிர்த்து, அரபு நாடுகள் ஒன்றிணைந்து, புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்தன. இஸ்ரேல் தயாரிப்புப் பொருட்களையும், இஸ்ரேலிய நிறுவனங்களால் பிற நாடுகளில் தயாரிக்கப்படும் பொருட்களையும் அவை புறக்கணித்தன.

இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டு, ஈராக் மீதான தமது யுத்தத்திற்கு துணைக்கு வரவில்லை என்ற கோபத்தில், அமெரிக்கர்கள் பிரெஞ்சிப் பொருட்களைப் புறக்கணித்தனர். பிரெஞ்சுத் தயாரிப்பு வைன் சீஸ் போன்றவற்றை அவர்கள், குப்பைத் தொட்டிகளில் வீசினர். அமெரிக்காவின் முஸ்லீம் நாடுகள் மீதான போர்களை எதிர்த்து, முஸ்லீம் மக்கள் கொக்கோகோலா பானத்தை புறக்கணித்தனர். அதற்குப் பதிலாக மெக்கா கோலா என்ற பானத்தை அறிமுகப்படுத்தினர். இப்படியாக, உலக வரலாறுகளில் புறக்கணிப்புப் போராட்டங்கள் பல நடந்திருக்கின்றன. நடந்துகொண்டிருக்கின்றன. அவை பல தாக்கமான அதிசயிக்கத்தக்க விளைவுகளை ஏற்படுத்தியுமிருக்கின்றன .நாமும், சிறீலங்காப் பொருட்களைப் புறக்கணித்து, வரலாற்றில் ஒரு தாக்கமான விளைவை ஏற்படுத்துவோமா? ஏற்படுத்துவோம்! என்று முடிவெடுத்துச் செயற்படுவோம்.

வாசகன்

சுப்பு

நன்றி ஈழமுரசு(2008)

No comments: